26.1.11

தக்லீத் ஓர் ஆய்வு.(தொடர் 03)
முன்னோர்களை பின்பற்றுவதும் வழிகேடே !
RASMIN M.I.Sc
 
கடந்த தொடரில் மத்ஹபைப் பின்பற்றுபவர்கள் எப்படி தக்லீத் செய்கிறார்கள் என்பதைப் பற்றிப் பார்த்தோம்.

இந்தத் தொடரில் முன்னோர்களை பின்பற்றுவதாக வாதிட்டு தக்லீத் செய்பவர்களைப் பற்றிப் பார்ப்போம்.

முன்னோர்களை பின்பற்றுவதும் தனிமனித வழிபாடுதான்.

இமாம்களைப் பின்பற்றுபவர்கள் சொல்லும் மற்றொரு வாதம் தான் முன்னோர்கள் சொன்னவைகள் மார்க்கமாகும் என்பது.

அதாவது நமது முன்னோர்கள் என்று யார் யாரெல்லாம் வாழ்ந்து மரணித்தார்களோ அவர்கள் எந்த முறையில் தங்கள் வாழ்க்கையை அமைத்தார்களோ அந்த முறையில் தான் நாமும் வாழ வேண்டும் என்பது இவர்களின் வாதமாகும்.

எந்தப் பெரிய அறிஞனாக இருந்தாலும்,விஞ்ஞானியாக இருந்தாலும்,மிகப் பெரிய ஆய்வாளனாக இருந்தாலும் அனைவரையும் முட்டாலாக மாற்றும் ஒரு குருட்டு பக்திதான் இந்த முன்னோர்கள் வாதம்.

எந்தப் பெரிய கல்வியாளனையும் முன்னோர்கள் என்ற வாதம் ஒரு பக்தி வட்டத்திற்குள் கொண்டு வந்து விடும்.

ஆனால் இஸ்லாமிய மார்க்கம் இந்த குருட்டு பக்தியை துடைத்தெரிகிறது.
குர்ஆன் கூறும் செய்திகளைப் பாருங்கள்.

அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?      (அல்குர்ஆன் 2:170)

மனிதனது அறிவுக்கும்இ சுயமரியாதை உணர்வுக்கும் கேடு விளைவிக்கக் கூடிய இந்தக் குருட்டு பக்தி முஸ்லிம்களிடம் இருக்கக் கூடாது என்று இறைவன் இந்த வசனத்தில் கட்டளையிடுகின்றான். ஆயினும் பெரும்பாலான முஸ்லிம்கள் பிற மதத்தவரிடமிருந்து காப்பியடித்து இந்தப் போக்கைத் தமதாக்கிக் கொண்டனர்.

முன்னோர்களின் கொள்கைகள் குர்ஆனுக்கு நேர் முரணாக அமைந்திருந்தாலும், தெளிவாக அது சுட்டிக் காட்டப்பட்ட பின்னரும் கூட, "எங்கள் முன்னோர்கள் இப்படித் தான் செய்தனர்; அதையே நாங்களும் செய்கிறோம்'' எனக் கூறுகின்றனர்.

சமாதிகளில் வழிபாடு செய்வதும், ஷைகுமார்களின் கால்களில் விழுவதும், சந்தனக் கூடு, கொடியேற்றம் நடத்துவதும், கத்தம் பாத்திஹாக்களை சிரத்தையுடன் செய்து வருவதும், இது போன்ற இன்னும் பல காரியங்களும் மார்க்கத்தின் அம்சங்களாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் முன்னோர்களைப் பின்பற்றுவது தான்.

அல்லாஹ்வும்இ அவனது தூதரும் இவற்றைத் தடை செய்துள்ளனர் என்று யாரேனும் சுட்டிக் காட்டினால், "எங்கள் முன்னோர்கள் இப்படித் தான் செய்தனர்; அவர்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது?'' என்பதே அவர்களின் பதிலாக இருக்கின்றது. இத்தகையோருக்கு இந்த வசனத்தில் சரியான மறுப்பு அமைந்துள்ளது.

 இவர்களின் இந்தக் குருட்டு பக்திக்கான காரணம் என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மார்க்கத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடமிருந்து நபித்தோழர்கள் மார்க்கத்தைக் கற்றனர். அவர்களிடமிருந்து அடுத்த தலைமுறையினர் கற்றனர். இப்படியே வாழையடி வாழையாகவே மார்க்கத்தை நாம் கற்று வருகிறோம். எனவே எங்கள் முன்னோர்கள் செய்தவை யாவும் நபி (ஸல்) அவர்களின் வழியாக வாழையடி வாழையாகவே வந்திருக்க முடியும் என்று இவர்கள் நம்புவதே இதற்குக் காரணமாகும்.

நபி (ஸல்) அவர்களிடமிருந்து நபித்தோழர்களும், அவர்களிடமிருந்து அடுத்த தலைமுறையினரும் வாழையடி வாழையாக இம்மார்க்கத்தைக் கற்றாலும் கூட, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒன்றைக் கூட்டவோ, குறைக்கவோ செய்திருக்க முடியும் என்ற உண்மையை அவர்கள் உணர்வதில்லை.

ஏசுவை இறைவனின் மகன் என்று ஒரு கூட்டத்தினர் நம்புகின்றனர். இந்தக் கொள்கை ஏசுவிடமிருந்து தங்களுக்கு வாழையடி வாழையாகக் கிடைத்தது என்று தான் அவர்கள் நம்புகிறார்கள். இறைவனுக்கு மகன் இல்லை என்று போதனை செய்த ஏசுவின் பெயரால் அவரது போதனைக்கு முரணான கொள்கை நடைமுறைக்கு வந்திருப்பது எதைக் காட்டுகிறது? வாழையடி வாழையாக முழுமையான போதனை வந்து  சேர முடியாது என்பதைக் காட்டவில்லையா?

இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைக்கேற்பஇ இறைவனை வணங்குவதற்காக கஅபா ஆலயத்தைப் புனர் நிர்மாணம் செய்தார்கள். அந்தக் கஅபாவுக்குள் அவர்களின் சந்ததியினரே 360 சிலைகளை வைத்து வழிபட்டது எதைக் காட்டுகிறது? முன்னோர்கள் முழு அளவுக்கு நம்பகமானவர்கள் அல்லர் என்பதைக் காட்டவில்லையா?

தங்கள் முன்னோர்கள் செய்த காரியங்கள் நபி (ஸல்) அவர்கள் வழியாகத் தான் வந்திருக்க முடியும் என்று இவர்கள் கூறுவது ஏற்கத்தக்கது என்றால், ஏசு இறைமகன் எனும் கோட்பாடு ஏசுவிடமிருந்து தான் வந்தது என்று கிறித்தவர்கள் கூறுவதை எப்படி மறுக்க முடியும்? உருவச் சிலைகள் வழிபாடு இப்ராஹீம் நபியின் மூலமாகவே வந்திருக்க முடியும் என்று மக்கத்து இறை மறுப்பாளர்கள் நம்பியதை எப்படித் தவறென்று கூற முடியும்?

நமது முன்னோர்கள் தாம் தொழுகை, நோன்பு போன்றவற்றைக் கூட மார்க்கம் என்று நமக்கு அறிமுகம் செய்து வைத்தனர். இந்த விஷயங்களில் முன்னோர்களை நாம் பின்பற்றவில்லையா? என்று சிலர் கேட்கலாம். முன்னோர்களை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்று இந்த வசனம் கூறவில்லை. அனைத்து விஷயங்களிலும் அவர்களைப் பின்பற்றுவது எப்படித் தவறானதோ அதே போன்று அனைத்து விஷயங்களிலும் அவர்களைப் புறக்கணிப்பதும் தவறானதாகும்.

"அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தால் கூட அவர்களைத் தான் பின்பற்றப் போகிறார்களா?'' என்று இறைவன் கேட்பதிலிருந்து இதை நாம் விளங்கலாம்.

முன்னோர்கள் சென்றது நேர்வழியாக இருந்தால் - அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியாக இருந்தால் - தாராளமாக அதை ஏற்கலாம். தொழுகைஇ நோன்பு போன்ற கடமைகள் இந்த வகையில் அமைந்துள்ளதாலேயே அதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

முன்னோர்களைப் பின்பற்றக் கூடியவர்கள் தங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இல்லை என்பதையும் நாம் உணர்த்த வேண்டியுள்ளது. முன்னோர்களைப் பின்பற்றுவோர் மார்க்க விஷயங்களில் மட்டுமே அவர்களைப் பின்பற்றுகின்றனர். உலக விஷயங்களில் யாருமே முன்னோர்களை பின்பற்றுவதில்லை.

முன்னோர்கள் நவீன வாகனங்களைக் கண்டதில்லை. மின் சாதனங்களைக் கண்டதில்லை. உறுதியான கட்டடங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் இவற்றையெல்லாம் பயன்படுத்தியதில்லை என்பதற்காக அவர்களின் வழித் தோன்றல்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. முன்னோர்கள் வாழ்ந்திராத வாழ்க்கைக்கு இவர்கள் ஆசைப்படுகிறார்கள். தங்களுக்கு அதிக நன்மை தரக் கூடியது என்றால் முன்னோர்கள் செய்யாதவற்றைச் செய்கின்றனர். முன்னோர்கள் செய்தவற்றை விட்டு விடவும் செய்கின்றனர்.

உலக விஷயங்களில் முன்னோர்களைப் பின்பற்றுவதால் மிகப் பெரிய கேடு எதுவும் ஏற்படப் போவதில்லை. அற்பமான இந்த உலகத்தில் சிறிதளவு சிரமம் ஏற்படலாம், அவ்வளவு தான்!

ஆனால் மார்க்க விஷயத்தில் முன்னோர்களைக் கண்மூடித் தனமாகப் பின்பற்றினால் மறுமை வாழ்வே பாழாகி விடும் என்பதை இவர்கள் உணர்வதில்லை.

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் "நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுவார்கள்.

"எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்'' எனவும் கூறுவார்கள்.      (33:66, 67)

முன்னோர்கள், பெரியார்கள் மீது கொண்ட குருட்டு பக்தி நம்மை நரகத்தில் தள்ளி விடும் என்று இறைவன் எச்சரித்த பிறகு, உலக விஷயங்களை விட மார்க்க விஷயங்களில் அதிகக் கவனம் அவசியம் என்பதை உணர வேண்டாமா?

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு விஷயத்தைக் கூறியிருப்பது தெரிய வந்தால், முன்னோôர்களின் வழிமுறைக்கு அது மாற்றமாக இருந்தாலும் அல்லாஹ்வும்இ அவனது தூதரும் கூறியதையே எடுத்து நடக்க வேண்டும். மக்கத்துக் காஃபிர்கள் தங்களின் முன்னோர்களைக் காரணம் காட்டியது போல் காரணம் கூறக் கூடாது.

அல்லாஹ்வின் வேதத்தையும், அவனது தூதரின் போதனை களையும் புறக்கணிப்பதற்குக் காரணமாக உள்ள முன்னோர் பக்தியைத் தூக்கி எறியக் கூடியவர்களே இந்த வசனத்தை உணர்ந்து செயல்படுத்தியவர்களாவர். இந்த பக்தி அகன்று விடுமானால் சமுதாயத்தில் நிலவுகின்ற குழப்பங்களில் பெருமளவு நீங்கி விடும். 

ஆய்வு தொடரும்...................

செய்திகள்