31.10.11

குர்பானிக்கு மாடறுப்பதை தடுப்பாரா மேர்வின் சில்வா?

இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் இனவாதம்.
RASMIN M.I.Sc
கடந்தஇருபது வருடங்களுக்கும் மேலாக இலங்கையை ஆட்டிப்படைத்த விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்தை ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னனி அரசு பொருப்பேற்ற சில வருடங்களிலேயே முழுமையாக துடைந்தெரிந்தது அனைவரும் அறிந்ததே!

இதே நேரத்தில் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதில் இருந்து இன்று வரைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அடிக்கடி தெரிவித்து வரும் ஒரு முக்கியமான கருத்து என்னவெனில் இலங்கையில் இனவாதம் என்பது இனிமேல் கிடையாது. ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரும் அவரவர் உரிமைப்படி வாழ முடியும் என்பதாகும்.

இனங்களுக்கு இடையில் இருக்கும் முறுகல் நிலைமையை நாம் துடைத்தெரிய வேண்டும் அதற்காக நாம் அனைவரும் ஒன்றினைந்து பாடுபட வேண்டும் என்று அளும் அரசு அடிக்கொரு முறை அறிவித்து வருகிறது.

நிலைமை இப்படியிருக்கும் போது இனங்களுக்கிடையில் பிரச்சினையை உண்டாக்கும் வகையில் இனவாதத்தை தூண்டும் வகையில் சிலர் செயல்படுகிறார்கள் என்பதை அறிந்தோ அறியாமலோ இலங்கை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

ஆம் ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னனி அரசின் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மாடறுப்பதற்கான தடைகள் விஷயத்தில் அரசாங்கம் இன்று வரை ஒரு சாதகமான பதிலைத் தரவில்லை.

இலங்கையில் தற்போது நடப்பது என்ன?

இது வரை காலமும் இலங்கையில் வாழும் முஸ்லீம்கள் தாங்கள் கொண்டாடும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு குர்பானி பிரானியை அறுத்து அதன் இறைச்சியை ஏழை மக்களுக்குப் பங்கிட்டு வந்தார்கள் இதற்கு யாரும் தடையாக இருக்கவில்லை.

ஆனால் கடந்த சில மாதங்களாகமக்கள் தொடர்பாடல் அமைச்சராக இலங்கை அரசினால் நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் மேர்வின் சில்வா அவர்கள் இதற்கு பாரிய அளவில் தனது எதிர்பை வெளிப்படுத்தி வருகிறார்.”

குர்பானிக்கு பிரானிகளை அறுப்பதைத் தடுத்து நிறுத்த முற்படுவதைப் போலவே இந்துக்கள் தங்கள் மத அடிப்படையில் பலி கொடுக்க நினைக்கும் பிரானிகளையும் மேர்வின் சில்வா தடுத்து வருகிறார். (இந்துக்களின் பலி முறைக்கும், இஸ்லாத்தின் குர்பானி முறைக்கும் வேறுபாடு உள்ளது).

கடந்த ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் குர்பானிக்காக கொண்டு வந்து வைத்திருந்த மாடுகளை பலவந்தமாக இவர் எடுத்துச் சென்றது அனைவரும் அறிந்ததே! அதே போல் கடந்த மாதம் 13ம் தேதி சிலாபம் முன்னேஸ்வரம் கோயிலில் இருந்த கால்நடைகளையும் பலவந்தமாக எடுத்து சென்றார். இதற்கு போலிசாரும் துணையாக இருந்தார்கள்.

இப்படி பல இடங்களில் உயிர் வதையை தடுக்கிறேன் என்ற போர்வையில் மத அனுஷ்டானங்களில் இவர் கைவைப்பது சகஜமாகிவிட்டது.

மாடறுப்பு மட்டும்தான் உயிர் வதையா?

உயிர் வதையைத் தடுக்கிறேன் என்ற பெயரில் தான் மேர்வின் சில்வா மாடறுப்பதைத் தடை செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார்.

உண்மையில் உயிர் வதையைத் தடுப்பதுதான் மேர்வின் சில்வாவின் நோக்கம் என்றால் இறைச்சிக்காக கோழி அறுப்பதை இவர் ஏன் தடுக்க முன்வரவில்லை? பன்றி அறுப்பதை இவர் ஏன் தடை செய்யவில்லை? மீன் பிடிப்பதை இவர் ஏன் தடுக்கவில்லை? கோழி, பன்றி மீன் போன்றவை இவர் பாணியில் உயிர்கள் இல்லையோ?

உயிர் வதை செய்யப்படுகிறது என்ற காரணத்திற்காக மாடு அறுப்பது தடை செய்யப்பட்டால் நாம் மேற்கூறிய அனைத்துக்கும் அந்தச் சட்டம் போடப்படவேண்டுமே?

அது மட்டுமா? இலங்கையில் டின் மீன் உற்பத்தி, கருவாடு, மாசி உற்பத்தி இறக்குமதி அனைத்தையும் தடுக்க வேண்டும்.

இலங்கையில் உணவுக்காக அன்றாடம் மீன்களும், கோழிகளும் கொல்லப்படுவதுடன் குஞ்சுகளாக உருவாக இருக்கும் இலட்சக் கணக்கான முட்டைகளும் கலைக்கப்பட்டு உணவுக்காக பயன்படுத்தப்படுகின்றது. இவற்றுக்கும் மேர்வின் சில்வாவின் தடை வருமா?

இறைச்சிக் கடையை மூட பாடுபடுபவர் KFC மற்றும் CARGILLS போன்ற நிறுவணங்களை கண்டுகொள்ளாதது ஏன்?

கடந்த சில தினங்களுக்கு முன் லங்கா தீப பத்திரிக்கைக்கு அமைச்சர் மேர்வின் சில்வா கொடுத்த பேட்டியொன்றில் கம்பஹா மாவட்டத்தில் இருக்கும் அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூடி நாட்டுக்கு முன்மாதிரியாக இருக்கப்போவதாக தெரிவித்திருந்தார்.

மாடு அறுப்பதைத் தடுப்பதற்கு இவ்வளவு முக்கியத்துவம் வழங்கும் மேர்வின் சில்வா அவர்கள் இறைச்சியை சமைத்து வியாபாரம் செய்யும் பிரபல கம்பனிகளான கே.எப்.சி. மற்றும் மெக்டொனால்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை மூட ஆவன செய்வாரா?

மாட்டிறைச்சிக் கடைகளை மூடுவதற்கு அயராது உழைக்கும் அமைச்சர் அவர்கள் மாட்டை அறுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து வியாபாரம் செய்யும் கார்கில்ஸ் போன்ற பிரபல நிறுவனங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பாரா?

கடந்த 18-09-2011 ம் தேதி வெளிவந்த ராவய பத்திரிக்கையின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில தகவல்களை இங்கு நாம் சுட்டிக்காட்டுவது சிறப்பாக இருக்கும்.

குழந்தைப் பருவத்தில் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு விலங்குப் புரதம் அத்தியவசியமானது என விஞ்ஞானம் தெரிவிக்கின்றது. மக்களின் இன ரீதியிலான கலாசாரத்துடன் இணைந்ததாக உணவுக் கலாசாரமும் உள்ளது முஸ்லீம் மக்கள் பன்றி இறைச்சியை உண்ணாவிட்டாலும், மாட்டிறைச்சியை உண்ணுகிறார்கள். இந்துக்கள் மாட்டிறைச்சியை உணவுக்காகப் பயன்படுத்தாவிட்டாலும், ஆட்டிறைச்சி, கோழியிறைச்சி போன்ற வேறு வகை இறைச்சிகளை உணவுக்காகப் பயன்படுத்துகின்றார்கள். பௌத்தர்களிலும் முற்று முழுதாக மீன், இறைச்சி சாப்பிடாதவர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை.

கொரிய மக்கள் நாய் இறைச்சியை மிகவும் ருசியான உணவாகக் கருதுகிறார்கள். தாய்லாந்து புத்த மதத்தைப் பின்பற்றக் கூடிய நாடாகும் ஆனால் அந்நாட்டு மக்கள் நல்ல பாம்பு, கண்ணாடி விரியன் போன்ற விஷ ஜந்துக்களையும் உணவாக எடுக்கிறார்கள். பிரான்ஸ் நாட்டவர்கள் தவளையை உணவாக உட்கொள்வதுடன், சீனர்கள் சங்கட்டையை உணவாக உட்கொள்கிறார்கள். ஜப்பானில் மிகவும் விலை உயர்ந்த உணவாகக் கருதப்படுவது மாட்டிறைச்சியாகும். ஜப்பானியர்கள் சமைக்காத மீன்களை (பச்சையாக) உணவாக உட்கொள்கிறார்கள். வியட்னாமைச் சேர்ந்தவர்கள் ஈசல், கரப்பான் போன்றவற்றை உணவாகக் கொள்கிறார்கள். இந்தியாவில் ஒரு கூட்டத்தினர் எலிகளை ருசியான உணவாக உண்கிறார்கள்.

பல்வேறு இன மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களும் பல்வகையானதாகும்.

சிரேஷ்ட தரத்தில் கணிக்கக் கூடிய பௌத்த அரசர்கள் கூட வேட்டையாடினார்கள். வேட்டை இறைச்சியைச் சாப்பிட்டார்கள். பண்டைய எல்லாக் கிராமங்களிலும் குளங்கள் காணப்பட்டன. குளத்து மீன்கள் கிராமத்தில் இருந்து சகலருக்கும் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டன. அதில் பௌத்த பன்சலைக்கும் ஒரு பங்கு வழங்கப்பட்டது.

அநாவசியமாக மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களில் கை வைப்பது ஆரோக்கியமான விஷயமாகக் கருத முடியாது. அவ்வாரான செயல்கள் பல் வகை உணவுப் பழக்க வழக்கங்களைக் கொண்ட மக்களை இம்சிக்கும் செயலாகும்.

இலங்கையிலும் பல்வேறு இனத்தவர்கள், சமயங்கள் பேரில் தாக்கத்தை உண்டாக்கக் கூடிய சிக்களான பிரச்சினைகளின் போது தீப்பற்றி எறிய வைக்கும் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். என்று ராவய பத்திரிக்கை தனது ஆசிரியர் தலையங்கக் கருத்தை வடித்துள்ளது.

இலங்கையில் நாளாந்தம் நூற்றுக் கணக்கான சட்டவிரோத கருக்கலைப்புகள் நடந்தவன்னம் உள்ளன. இந்த உயிர் வதைக்கு எதிராக தலை நகரம் முதல் கிராமங்கள் வரை பரவிக்கிடக்கும் உல்லாச விடுதிகள் விபச்சாரத் தளங்களை மூட வேண்டும் என்ற குரல் கொடுப்பாரா மக்கள் தொடர்பாடல் அமைச்சர்?

இது வரைக்கும் இதற்கெல்லாம் வாய் திறக்காதவர் மாடறுப்பு விஷயத்திற்கு மாத்திரம் துள்ளிக் குதிக்கிறார் என்றால் இனவாதத்தை தூண்டுவதற்கான முயற்சியாக இது இல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?

மாடறுப்பதை மாத்திரம் தான் புத்த மதம் தடை செய்ததா?

தான் ஒரு புத்த மதத்தை பின்பற்றுபவன் என்பதினால் தான், புத்த மதத்தின் கருத்துப்படி உயிர் வதை செய்யக் கூடாது என்பதினால் மாடறுப்பதைத் தடுப்பதாக காரணம் கூறுகிறார் மேர்வின் சில்வா.

உண்மையில் புத்த மதம் மாடறுப்பதை பற்றியா பேசுகிறது என்றால் இல்லை. புத்த மதத்தின் தீர்ப்பின் படி எந்த ஒரு உயிரினத்தையும் கொல்லக் கூடாது அன்பு காட்ட வேண்டும். புத்த மதம் பசுவை மாத்திரம் எந்த இடத்திலும் சிறப்பித்துக் கூறவே இல்லை.

உண்மையில் புத்த மதத்தில் உயிர் வதை கூடாது என்பதினாலும், தான் ஒரு புத்த மதத்தை பின்பற்றுபவன் என்பதினாலும் தான் மேர்வின் சில்வா இந்தக் காரியத்தில் இறங்கியிருக்கிறார் என்றால் நாம் மேலே சுட்டிக் காட்டியதைப் போல் எந்த ஒரு உயிரினத்தையும் கொல்வதற்கு இவர் அனுமதிக்கக் கூடாது. அப்படி செய்வாரா அமைச்சர் மேர்வின்?

கடந்த 26ம் தேதி மல்வானையில் நடை பெற்ற குர்பான் தொடர்பான கலந்துரையாடலில் பங்கு கொண்ட அமைச்சர் மேர்வின் அவர்கள் அதில் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதாவது குர்பானி நேரத்தில் மாடு அறுப்பதை தான் தடுக்கப் போவதில்லை என்றும், இதே நேரத்தில் ஆறு அறுப்பதற்கு முன்னுரிமை வழங்கும் படியும் கூறியிருந்தார்.

உயிர் வதை என்பது மேர்வின் சில்வாவுக்கு உள்ள பிரச்சினை அல்ல மாறாக மாடு அறுப்பது தான் அவருக்குள்ள பிரச்சினை என்பது இதிலிருந்து தெளிவாக விளங்குகிறது.

முஸ்லீம் அமைச்சர்கள் வாய் மூடியிருப்பது ஏன்?

மாடு அறுத்தல் மற்றும் குர்பானி தொடர்பாக தொடர்ந்து நடந்து வரும் இந்தப் பிரச்சினையில் எந்தவொரு முஸ்லீம் அமைச்சர்களும் வாய் திறந்ததாகத் தெரியவில்லை. மற்ற எல்லா விஷயத்திற்கு முஸ்லீம் சமுதாயத்தின் அரசியல் பிரதிநிதிகளாக தங்களை தூக்கி நிறுத்திக் கொள்ள முயலும் இவர்கள் இந்த விஷயத்தில் மாத்திரம் வாய் திறக்காமல் இருப்பது ஏனோ?

இஸ்லாமிய மார்க்கத்தின் மிக முக்கியமான ஒரு கடமை தொடர்பான சர்சை பல மாதங்களாக தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தும் அதைப் பற்றி எந்த அமைச்சர்களும் கவலைப் படுவதாகவோ கருத்துத் தெரிவித்ததாகவோ தெரியவில்லை.

சட்டத் துறை அமைச்சராக இருக்கும் ரவுப் ஹக்கீம் அவர்கள் இது தொடர்பாக இது வரைக்கும் வாய் திறக்கவில்லை.

ரிஷாத், ஹிஸ்புல்லாஹ் என்ற யாரும் இது தொடர்பாக எதுவும் பேசவில்லை. எடுத்ததுக்கெல்லாம் கருத்துச் சொல்லும் அலவி மவ்லானா இந்த விஷயத்தில் இது வரைக்கும் தனது நிலைபாட்டை அறிவிக்கவில்லை.

ஆக மொத்தத்தில் தங்கள் ஓட்டு வங்கியை நிறப்பிக் கொள்வதற்காக காலத்திற்கு காலம் கொடிபிடிக்கும் இவர்கள் இஸ்லாமியர்களின் பிரச்சினைகளை சற்றும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்பதற்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அன்பின் சகோதரர்களே!

இஸ்லாம் சொல்லும் குர்பானி என்ற சட்டம் ஒரு போதும் மிருகவதையை சொல்லியதே இல்லை. நாம் குர்பானி பிரானியை அறுக்கும் முறை அவற்றை வதைப்படுத்துவதாகவும் இல்லை. மாறாக தெளிவான முறையில் மிகவும் அழகிய முறையில் இஸ்லாமிய குர்பானி அறுப்பு முறைமை அமைந்திருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல் நமது கடமையை நாம் செவ்வனே செய்ய முயல்வோமாக!

செய்திகள்