Rasmin M.I.Sc
அன்பின் இணையதள வாசகர்களே! ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன? என்ற இந்தத் தலைப்பின் மூலம் நாம் உங்கள் மத்தியில் பகிர இருக்கும் விஷயம் என்னவெனில்,நமக்கு மத்தியில் ஏகத்துவப் பிரச்சாரம் செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் சிலர் கண்ணுக்குப் புலப்படாத இறைவனின் படைப்புகளில் ஒன்றான இந்த ஜின் விஷயத்தில் மிகவும் பாரதூரமான, மார்க்கத்திற்கு முரனான,சிந்தனைக்கு சிறிதளவும் தொடர்பில்லாத பல விஷயங்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள்.
ஜின்களைப் பற்றி பேசுவவர்களும், இணைய தளங்களில் எழுதுபவர்களும் ஜின்கள் பற்றிய உண்மைக் கருத்துக்களை திருமறைக் குர்ஆன்,மற்றும் நபியவர்களின் சுன்னா வழியில் எடுத்துச் சொன்னால் பிரச்சினை இல்லை.ஆனால் சிலரோ நபியவர்களின் சுன்னாவின் கருத்தை தங்கள் கருத்துக்கு சாதகமான வலைத்து,திருப்பி வைத்துக் கொண்டு ஜின்களை வசப்படுத்த முடியும்,ஜின்கள் நமது உடலுக்குள் புகுந்து பிரச்சினைகளை,சிக்கள்களை உண்டாக்கும் வல்லமை மிக்கவை போன்ற குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமான,ஏகத்துவத்தை குழி தோன்டிப் புதைக்கின்ற கருத்துக்களை பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
அவர்கள் பிரச்சாரம் செய்யும் கருத்துக்களின் உண்மை நிலையைப் பற்றி ஆராய்வதுடன்,குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஜின்கள் பற்றிய ஒரு தெளிவை தருவதற்காகவே இந்தத் தொடர் இங்கு பதிப்பிக்கப் படுகிறது.
இனி ஜின்கள் பற்றிய இரண்டாவது பகுதியை ஆராய்வோம்.
நல்ல ஜின்களும், கெட்ட ஜின்களும்.
மனிதர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பதைப் போன்று ஜின்களிலும் நல்வர்கள் தீயவர்கள் உண்டு. இதை பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறியலாம்.
நம்மில் நல்லோரும் உள்ளனர். அவ்வாறு இல்லாதோரும் உள்ளனர். பல வழிகளில் சிதறிக் கிடந்தோம் (என்று ஜின்கள் கூறின).
அல்குர்ஆன் (72 : 11)
எங்களில் மூடன் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுபவனாக இருந்தான். "மனிதர்களும், ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள்'' என்று எண்ணிக் கொண்டிருந்தோம். (என்று ஜின்கள் கூறியது)
அல்குர்ஆன் (72 : 4)
இவர்களுக்குத் தோழர்களை நியமித்துள்ளோம். இவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவர்கள் அழகாக்கிக் காட்டுகின்றனர். எனவே இவர்களுக்கு முன் சென்று விட்ட ஜின்கள் மற்றும் மனிதர்களில் உள்ள (தீய) கூட்டங்களுடன் சேர்த்து இவர்களுக்கு எதிராகவும் கட்டளை உறுதியாகி விட்டது. இவர்கள் நஷ்டமடைந்தோராகி விட்டனர்.
அல்குர்ஆன் (41 : 25)
நபி (ஸல்) அவர்கள் வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள் : என் அடியார்களே! உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் உங்களில் மிகவும் இறையச்சமுடைய ஒரு மனிதரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் அதிகமாக்கி விடுவதில்லை.
என் அடியார்களே! உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் மிகவும் தீய மனிதர் ஒருவரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் குறைத்துவிடப்போவதில்லை.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி)
நூல் : முஸ்லிம் (5033)
ஜின்களில் இறைமறுப்பாளர்கள் உண்டு.
ஜின்களில் இறைவனை நம்பியோரும் இறைவனை நிராகரிப்பவர்களும் உண்டு. இந்த உலகத்தில் இறைமறுத்தோராக இருந்தோம் என்று கெட்ட ஜின்கள் மறுமை நாளில் தங்களுக்கு எதிராக சாட்சி கூறும்.
ஜின் மற்றும் மனித சமுதாயமே! "உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை நீங்கள் சந்திக்க விருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களில் இருந்து உங்களிடம் வரவில்லையா?'' (என்று இறைவன் கேட்பான்). "எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வுலக வாழ்வு அவர்களை மயக்கி விட்டது. (ஏக இறைவனை) மறுத்தோராக இருந்தோம் எனத் தங்களுக்கு எதிராக அவர்கள் சாட்சியமளிப்பார்கள்.
அல்குர்ஆன் (6 : 130)
இறைத்தூதர்களுக்கு எதிரிகள்.
தீய மனிதர்கள் இறைத்தூதர்களுக்கு துயரங்களையும் துன்பங்களையும் கொடுத்தது போல் கெட்ட ஜின்களும் இறைத்தூதர்களுக்கு இடஞ்சல்களை கொடுத்துள்ளனர்.
இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். (முஹம்மதே) உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!
அல்குர்ஆன் (6 : 112)
நபி (ஸல்) அவர்களின் தொழுகையை பாழ்படுத்துவதற்காக ஒரு கெட்ட ஜின் ஒன்று முயற்சித்தது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பலம் பொருந்திய ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது. அல்லாஹ் எனக்கு அதை வசப்படுத்தித் தந்தான். நான் அதைப் பிடித்துக் கொண்டேன். நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பார்ப்பதற்காக அதைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டி வைக்க விரும்பினேன். அப்போது, என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த, "என் இறைவா! எனக்குப் பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் அதிகாரத்தை எனக்கு வழங்குவாயாக!'' (38:35) என்னும் பிரார்த்தனையை நினைவு கூர்ந்தேன். உடனே, அதைச் சபித்து எறியப்பட்டதாகத் திருப்பியனுப்பி விட்டேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (3423)
ஜின்களுக்கும் விசாரணை உண்டு.
உலகத்தில் வாழும் போது ஜின்கள் செய்த குற்றங்களுக்கு மறுமையில் அல்லாஹ் விசாரனை செய்வான்.
ஜின்களுக்கும், அவனுக்குமிடையே வம்சாவளி உறவை அவர்கள் கற்பனை செய்து விட்டனர். தாம் (இறை வன் முன்) நிறுத்தப்படுவோம் என்பதை ஜின்கள் அறிந்து வைத்துள்ளன.
அல்குர்ஆன் (37 : 158)
அந்நாளில் எந்த மனிதனிடமும், ஜின்னிடமும் அவரது குற்றம் குறித்து விசாரிக்கத் தேவை இருக்காது.
அல்குர்ஆன் (55 : 39)
கெட்ட ஜின்களுக்கு நரகம் உண்டு.
மனிதர்களில் குற்றம்புரிந்தவர்கள் மறுமையில் தண்டிக்கப்படுவதை போல் ஜின்களில் கெட்டவர்களும் தண்டிக்கப்படுவார்கள். உலகில் செய்த பாவங்களுக்காக நரக வேதனையை சுவைப்பார்கள்.
"உங்களுக்கு முன் சென்று விட்ட சமுதாயங்களான ஜின்கள் மற்றும் மனிதர்களுடன் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்!'' என்று (அவன்) கூறுவான்.
அல்குர்ஆன் (7 : 38)
ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம்.
அல்குர்ஆன் (7 : 179)
மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவராலும் நரகத்தை நிரப்புவேன் என்ற உமது இறைவனின் வாக்கு முழுமையாகி விட்டது.
அல்குர்ஆன் (11 : 119)
நாம் நினைத்திருந்தால் ஒவ்வொருவருக்கும் அவருக்கான நேர் வழியைக் கொடுத்திருப்போம். மாறாக "அனைத்து மனிதர்களாலும், ஜின்களாலும் நரகத்தை நிரப்புவேன்'' என்று என்னிடமிருந்து சொல் முந்தி விட்டது.
அல்குர்ஆன் (32 : 13)
மனித ஜின் கூட்டங்களைப் பார்த்து நரகத்தை அல்லாஹ் எச்சரிக்கிறான்.
குற்றவாளிகள் அவர்களின் அடையாளத்தால் அறியப்படுவார்கள். முன் நெற்றிகளும், பாதங்களும் பிடிக்கப்படும். உங்கள் இறைவனின் அருட் கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகின்றீர்கள்?
குற்றவாளிகள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகம் இதுவே. அதற்கும், கொதி நீருக்குமிடையே அவர்கள் உழல்வார்கள். உங்கள் இறைவனின் அருட் கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
அல்குர்ஆன் (55 : 41.42.43.44.45)
நெருப்பால் படைக்கப்பட்டவர்களை நெருப்பால் தண்டிக்க முடியுமா? என்ற சந்தேகம் கூட சிலருக்கு எழலாம்.
மண்ணால் படைக்கப்பட்ட மனிதன் மண் கற்களால் அடிக்கப்படும் போது மனிதன் வேதனைக்குள்ளாகிறான். இது போன்று மறுமையில் கெட்ட ஜின்களும் நெருப்பால் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புவது பாரதூரமான விஷயமில்லை.
வானுலக விஷயங்களை ஒட்டுக்கேட்பதற்காக ஜின்கள் முயற்சிக்கும் போது தீப்பந்தங்கள் அவர்களை விரட்டிச் சென்று கரித்துவிடும் என்ற தகவலை முன்பே பார்த்தோம். நெருப்பால் படைக்கப்பட்ட ஜின்களுக்கு நெருப்பு வேதனையை தரும் என்பதை இதன் மூலம் அறியலாம்.
நல்ல ஜின்களுக்கு சொர்க்கம் உண்டு.
இறைவனுக்கு கட்டுப்பட்டு நல்லவர்களாக வாழ்ந்த ஜின்கள் சொர்க்கம் புகுவார்கள்.
நேர் வழியை செவியுற்ற போது அதை நம்பினோம். தமது இறைவனை நம்புகிறவர் நஷ்டத்தையும், அநீதி இழைக்கப்படுவதையும் அஞ்சமாட்டார்.
நம்மில் முஸ்லிம்களும் உள்ளனர். அநீதி இழைத்தோரும் உள்ளனர். இஸ்லாத்தை ஏற்போர் நேர் வழியைத் தேடிக் கொண்டனர். அநீதி இழைத்தோர் நரகத்திற்கு விறகுகளாக ஆனார்கள். (என்று ஜின்கள் கூறின)
அல்குர்ஆன் (72 : 13.14.15)
நல்லவர்களாக வாழ்ந்தவர்களுக்கு சொர்க்கம் இருப்பதாக மனித ஜின் கூட்டத்தார்களை நோக்கி அல்லாஹ் நற்செய்தி கூறுகிறான்.
தமது இறைவன் முன் நிற்பதை அஞ்சியவருக்கு இரண்டு சொர்க்கச் சோலைகள் உள்ளன. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்? அவை அடர்த்தியான கிளைகளைக் கொண்டவை. உங்கள் இறைவனின் அருட் கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்? அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் பீறிட்டு ஓடும்.
அல்குர்ஆன் (55 : 46.47.48.49.50)
ஜின்கள் மனிதர்களுக்கு நன்மை செய்யுமா?
ஜின்களால் மனிதர்களுக்கு இந்த உலகத்தில் நன்மை ஏற்படும் என்று கூறுவதற்கு ஏற்கதக்க ஆதாரங்கள் எதுவும் இல்லை. உலகத்தில் பாங்கு சொன்னவருக்கு சாதகமாக ஜின்கள் மறுமையில் சாட்சி கூறும் என்று ஹதீஸில் உள்ளது.
அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம், "ஆட்டையும் பாலைவனத்தையும் விரும்புபவராக உங்களை நான் காண்கிறேன். நீங்கள் ஆட்டை மேய்த்துக் கொண்டோ, அல்லது பாலைவனத்திலோ இருக்க (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக அழைப்புக் கொடுப்பீர்களாயின் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒலிக்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும், பிற பொருள்களும் அதைக் கேட்டு அவருக்காக மறுமை நாüல் சாட்சி சொல்கின்றன'' என்று கூறிவிட்டு, "இதை நான் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து கேட்டேன்'' என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி (3296)
ஜின்கள் சுலைமான் நபிக்கு உதவியாக இருந்தன.
இறைவனுடைய கட்டளையின் காரணமாக ஜின்கள் சுலைமான் நபிக்கு கட்டுப்பட்டு உதவியாக இருந்தன.
ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்கு சுவைக்கச் செய்வோம். அவர் விரும்பிய போர்க்கருவிகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக ஜின்கள் செய்தன.
அல்குர்ஆன் (34 : 12)
ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.
அல்குர்ஆன் (27 : 17)
மனிதர்களுக்கு ஜின்களால் ஏற்படும் தீமை.
மனிதர்களின் உடலில் பலவீனத்தை ஏற்படுத்துதல் மனித உயிர்களை பறித்தல் வறுமையை ஏற்படுத்துதல் போன்ற எந்த தீங்கும் ஜின்களால் மனிதர்களுக்கு ஏற்படாது. மனித உள்ளங்களில் ஊடுருவி தீய எண்ணங்களை ஏற்படுத்தி வழிகேட்டிற்கு அழைப்பு விடுவது மட்டுமே கெட்ட ஜின்களால் ஏற்படும் தீங்காகும்.
கெட்ட ஜின்கள் ஏற்படுத்தும் தவறான எண்ணங்களுக்கு நாம் அடிமையாகினால் நரகத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதைத் தவிர வேறு எந்த தீங்கும் ஜின்களால் ஏற்படாது.
ஜின்களால் வழிகெடுக்கப்பட்டவர்கள் மறுமையில் புலம்புவதை அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.
அவர்கள் அனைவரையும் அவன் ஒன்று சேருக்கும் நாளில் "ஜின்களின் கூட்டத்தினரே! அதிகமான மனிதர்களை வழி கெடுத்து விட்டீர்கள்'' (என்று கூறுவான்). அதற்கு மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள் "எங்கள் இறைவா! எங்களில் ஒருவர் மற்றவர் மூலம் பயனடைந்தனர். நீ எங்களுக்கு விதித்த கெடுவையும் அடைந்து விட்டோம்'' என்று கூறுவார்கள். "நரகமே உங்கள் தங்குமிடம். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். அல்லாஹ் நாடுவதைத் தவிர'' (என்று கூறுவான்.) உமது இறைவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் (6 : 128)
எங்கள் இறைவா! ஜின்களிலும் மனிதர்களிலும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டு! அவர்கள் இழிந்தோராகிட அவர்களை எங்களின் பாதங்களின் கீழே ஆக்குகிறோம் என்று (ஏக இறைவனை) மறுத்தோர் கூறுவார்கள்.
அல்குர்ஆன் (41 : 29)
அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.
அல்குர்ஆன் (114 : 4)