18.1.11

ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன? (தொடர் 03)

 

அன்பின் இணையதள வாசகர்களே! ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்னஎன்ற இந்தத் தலைப்பின் மூலம் நாம் உங்கள் மத்தியில் பகிர இருக்கும் விஷயம் என்னவெனில்,நமக்கு மத்தியில் ஏகத்துவப் பிரச்சாரம் செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் சிலர் கண்ணுக்குப் புலப்படாத இறைவனின் படைப்புகளில் ஒன்றான இந்த ஜின் விஷயத்தில் மிகவும் பாரதூரமானமார்க்கத்திற்கு முரனான,சிந்தனைக்கு சிறிதளவும் தொடர்பில்லாத பல விஷயங்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள்.

ஜின்களைப் பற்றி பேசுவவர்களும்இணைய தளங்களில் எழுதுபவர்களும் ஜின்கள் பற்றிய உண்மைக் கருத்துக்களை திருமறைக் குர்ஆன்,மற்றும் நபியவர்களின் சுன்னா வழியில் எடுத்துச் சொன்னால் பிரச்சினை இல்லை.ஆனால் சிலரோ நபியவர்களின் சுன்னாவின் கருத்தை தங்கள் கருத்துக்கு சாதகமான வலைத்து,திருப்பி வைத்துக் கொண்டு ஜின்களை வசப்படுத்த முடியும்,ஜின்கள் நமது உடலுக்குள் புகுந்து பிரச்சினைகளை,சிக்கள்களை உண்டாக்கும் வல்லமை மிக்கவை போன்ற குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமான,ஏகத்துவத்தை குழி தோண்டிப் புதைக்கின்ற கருத்துக்களை பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அவர்கள் பிரச்சாரம் செய்யும் கருத்துக்களின் உண்மை நிலையைப் பற்றி ஆராய்வதுடன்,குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஜின்கள் பற்றிய ஒரு தெளிவை தருவதற்காகவே இந்தத் தொடர் இங்கு பதிப்பிக்கப் படுகிறது.

இனி ஜின்கள் பற்றிய மூன்றாவது பகுதியை ஆராய்வோம்.

ஜின்களை வசப்படுத்த முடியுமா?


ஜின்களை வசப்படுத்த முடியும் என்று கூறி பலர் பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள். நாம் நினைக்கின்ற காரியங்களை ஜின்களால் செய்து கொள்ள முடியும் என்ற தவறான எண்ணம் தான் மக்கள் ஏமாறுவதற்குக் காரணமாகும்.

இறைவன் நமக்கு வழங்கிய அறிவைக் கொண்டு சிந்தித்துப் பார்த்தால் ஜின்களை மனிதனால் ஒருபோதும் வசப்படுத்த முடியவே முடியாது என்பதை சந்தேகமற புரியலாம்.

ஜின்கள் என்பவர்கள் மிருகங்களை போன்று பகுத்தறிவு வழங்கப்படாதவர்கள் இல்லை. மனிதர்களைப் போன்று பகுத்தறிவு வழங்கப்பட்டவர்களாவர். மனித ஆற்றலோடு ஜின்களுக்கு வழங்கப்பட்ட ஆற்றலை ஒப்பிட்டுப் பார்த்தால் ஜின்களின் ஆற்றல் பன்மடங்கு உயர்ந்ததும் வியக்கத்தக்கதுமாகும். 

மனிதனை விட வலுமையான படைப்பான ஜின்களை பலவீனமான மனிதனால் எப்படி கட்டுப்படுத்த முடியும் என்பதை யோசித்தால் ஜின்களை வசப்படுத்துவதாக கூறுவது வடிகட்டிய பொய் என்பதை அறியலாம். 

சுமைலமான் நபிக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்பு.

ஜின்களை மனிதர்களால் வசப்படுத்த முடியாது. இறைவன் சுலைமான் (அலை) அவர்களுக்கு மட்டுமே ஜின்களை வசப்படுத்திக் கொடுத்திருந்தான் என்று திருக்குர்ஆனும் திருநபி (ஸல்) அவர்களின் போதனையும் கூறுகிறது. 

இறைவன் வசப்படுத்திக் கொடுத்த ஒரே காரணத்தால் தான் ஜின்கள் சுலைமான் நபிக்கு கட்டுப்பட்டு நடந்தன. இறைவன் வசப்படுத்தித் தராமல் சுயமாக ஜின்களை வசப்படுத்த முடியுமா என்றால் இது சுலைமான் (அலை) அவர்களாலும் முடியாது. 

காற்றை வசப்படுத்துவது எறும்புகளின் பாஷையை அறிவது இதுவெல்லாம் எந்த மனிதனாலும் முடியாத காரியமாகும். ஆனால் இவற்றை இறைவன் சுலைமான் (அலை) அவர்களுக்கு மட்டும் வழங்கினான். சுலைமான் நபிக்கு ஜின்கள் கட்டுப்பட்டு நடந்ததும் இந்த அடிப்படையில் தான்.

"என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல்'' எனக் கூறினார். அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப் படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது.

ஷைத்தான்களில் கட்டடம் கட்டுவோரையும், முத்துக் குளிப்போரையும், விலங்கிடப்பட்ட வேறு சிலரையும் (அவருக்கு) வசப்படுத்திக் கொடுத்தோம். "இது நமது அருட்கொடை! கணக்கின்றி மற்றவருக்குக் கொடுக்கலாம்! அல்லது நீரே வைத்துக் கொள்ளலாம்!'' (என்று கூறினோம்.)
அல்குர்ஆன் (38 : 35.36.37.38.39)

எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு என்று சுலைமான் (அலை) பிரார்த்தனை செய்கிறார்கள். சுலைமான் (அலை) அவர்களுக்குப் பிறகு வேறு யாரருக்கும் ஜின்களை வசப்படுத்தும் ஆற்றலை அல்லாஹ் வழங்கவில்லை என்பதை அவர்கள் கேட்ட பிரார்த்தனை ஆணித்தரமாக விவரிக்கிறது. 

முஹம்மது (ஸல்) அவர்களால் கூட வசப்படுத்த முடியாது.

நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்த போது அவர்களின் தொழுகையை முறிப்பதற்காக ஜின் ஒன்று இடஞ்சல் கொடுத்தது. அந்த ஜின்னுடைய கெடுதலை களைவதற்காக அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு பிரத்யேக ஆற்றலை வழங்கினான். இந்த ஆற்றலின் மூலம் கெடுதல் செய்த ஜின்னை நபி (ஸல்) அவர்கள் அடக்கினார்கள். 

அதே நேரத்தில் எல்லோரும் காணுகின்ற வகையில் அந்த ஜின்னை கட்டி வைக்க அவர்கள் நாடிய போது சுலைமான் நபியவர்கள் கேட்ட பிரார்த்தனையை நினைவு கூறுகிறார்கள். இவ்வாறு செய்வதற்கு தனக்கு ஆற்றல் வழங்கப்படவில்லை என்பதை சுலைமான் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனையிலிருந்து நபி (ஸல்) அவர்கள் விளங்கிக்கொள்கிறார்கள்.

எனவே ஜின்னை கட்டிப்போட்டு வசப்படுத்துவதற்கு முயற்சிக்காமல் அந்த ஜின்னை விட்டுவிடுகிறார்கள்.

(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள், "நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது'' என்றோ, அல்லது இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள். பிறகு "அதன் மீது அல்லாஹ் எனக்கு சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும் வரை இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்üவாச-ன் தூண்கüல் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நினைத்தேன். அப்போது "இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காதே ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக'' (38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) 
நூல் : புகாரி (461)

ஜின்னுடைய கெடுதலிலிருந்து காத்துக்கொள்கின்ற ஆற்றலை மட்டுமே அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கினாôன். அல்லாஹ் இந்த ஆற்றலை வழங்காவிட்டால் நபி (ஸல்) அவர்களால் கூட இதை செய்திருக்க முடியாது. 

ஜின்களை வைத்து காரியங்களை சாதிக்க முடியும் என்று வாதிடுபவர்களிடத்தில் சில கேள்விகளை கேட்பதன் மூலம் அவர்களின் ஏமாற்று வேலையை வெளிக்கொணரலாம். ஒரு பொருளை எடுத்து வருவது அல்லது ஒரு பொருளை வேறொரு இடத்திற்கு கொண்டு செல்வது இது போன்ற வேலைகளை ஜின்களால் செய்ய முடியும். 

இவர்களின் வாதம் உண்மையாக இருந்தால் ஜின்களின் உதவியால் நம் கையில் வைத்திருக்கும் பொருளை பறித்துச் செல்ல இவர்களால் முடியுமா? அல்லது நம் வீட்டில் உள்ள ஒரு பொருளை எந்த மனிதரின் உதவியும் இன்றி நமக்கெதிரே உட்கார்ந்துகொண்டு தீடிரென நம் கண்களுக்கு முன்னால் கொண்டு வர முடியுமா?

பாஸ்போர்ட் விசா விமானம் போன்றவை இல்லாமல் வெளிநாடுகளுக்கு ஜின்களின் உதவியால் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? இது போன்ற கேள்விகளுக்கு இந்த ஏமாற்றுப் பேர்வளிகளிடத்தில் எந்த பதிலும் இல்லை. 

தங்களின் தேவைகளை ஜின்களின் உதவியால் அடைந்துகொள்ள இயலாதவர்கள் ஜின்களின் உதவியால் நமது தேவைகளை எப்படி பூர்த்தி செய்ய முடியும். அற்பக்காசுகளை நம்மிடம் இவர்கள் எதிர்பார்ப்பதிலிருந்து இது மோசடி வியாபாரம் தான் என்பது தெளிவாகிறது. 

அல் ஜின்னு சூராவை ஓதினால் வசப்படுத்த முடியுமா?

குர்ஆனில் அல்ஜின்னு என்று ஒரு அத்தியாயம் உள்ளது. இந்த அத்தியாயத்தில் ஜின்களைப் பற்றிய விரிவான விளக்கம் கூறப்படுகிறது. இதை நாற்பது நாட்கள் தொடர்ந்து ஓதினால் ஓதியவருக்கு ஜின்கள் வசப்பட்டுவிடும் என்ற தவறான நம்பிக்கை பலரிடம் நிலவுகிறது. 

இந்த நம்பிக்கை உண்மைக்குப் புரம்பானது என்பதற்கு மேலே நாம் சுட்டிக்காட்டிய விபரங்களே போதுமானதாகும். குர்ஆனில் ஜின் என்று அத்தியாயம் இருப்பதை போலவே அந்நாஸ் (மனிதர்கள்) என்ற அத்தியாயமும் இடம்பெற்றுள்ளது. அந்நம்லு (எறும்பு) என்ற அத்தியாயமும் அல்பகரா (பசு மாடு) என்ற அத்தியாயமும் அல்ஃபீல் (யானை) என்ற அத்தியாயமும் இடம்பெற்றுள்ளது. 

ஜின் அத்தியாயத்தை ஓதுவதால் ஜின்னை வசப்படுத்த முடியும் என்பது உண்மையாக இருந்தால் அந்நாஸ் (மனிதர்கள்) என்ற அத்தியாயத்தை ஓதி மனிதர்களை வசப்படுத்த முடியுமா? அந்நம்லு (எறும்பு) என்ற அத்தியாயத்தை ஓதுவதால் எறும்பை வசப்படுத்த முடியுமா? அல்பகரா (பசுமாடு) என்ற அத்தியாயத்தை ஓதி பசுமாட்டை வசப்படுத்த முடியுமா? அல்ஃபீல் (யானை) என்ற அத்தியாயத்தை ஓதுவதால் யானை நமக்கு வசப்படுமா? இது அறிவற்ற வாதம் என்பதை இக்கேள்விகள் உணர்த்திக்கொண்டிருக்கிறது.
                                             Thanks to:  www.rasminmisc.tk

செய்திகள்