20.12.11

மலைக்க வைக்கும் மண்டபத் திருமணங்கள்

அண்மைக் காலத்தில் நமது தலைமையை நோக்கி திருமணம் தொடர்பான புகார்கள், விமர்சனங்கள் படையெடுக்க ஆரம்பித்தன.
தவ்ஹீது மணமகன் பெண் வீட்டாரிடம் ஏதேனும் மறைமுகமாக வரதட்சணை வாங்கிய விவகாரமா? அல்லது பெண் வீட்டில் விருந்தா? இது தொடர்பான புகார் எதுவும் வரவில்லை. விமர்சனம் எதுவும் வரவில்லை.
வந்த புகார், விமர்சனம் அனைத்தும் மண்டபத்தில் நடக்கும் திருமணம் குறித்துத் தான். மண்டபத்தில் திருமணம் மார்க்க அடிப்படையில் கூடாது என்பதாலா? அதுவும் இல்லை. மாறாக, மண்டபத் திருமணங்களில் செய்யப்படும் செலவினங்கள் பற்றியே விமர்சனம் எழுகின்றது.
திருமண விருந்தான வலீமாவைப் பொறுத்த வரையில் மார்க்கத்தில் ஒரு வரையறை இல்லை. அவ்வாறு ஒரு வரையறை வைக்க முடியாத நெருடலான விஷயம் திருமண விருந்து.
ஆனாலும் அதில் வரம்பு கடந்து சென்று விடக் கூடாது. அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
"குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 23388
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணமக்களை வாழ்த்தும் போது கூட அல்லாஹ் (பரக்கத்) அருள் செய்வானாக என்று தான் பிரார்த்திக்கின்றார்கள். அதனால் தம்பதியருக்கும் மிக மிக அவசியம் பரக்கத் என்பதை இதன் மூலம் விளங்கலாம்.
பரக்கத் என்பதன் பொருள்
இந்த பரக்கத் என்பதன் பொருள் என்ன? என்பதை விரிவாகத் தெரிந்து கொள்வதற்காக அல்லாஹ்வின் திருமறை வசனங்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களையும் பார்ப்போம்.
பூமியில் புதைந்து கிடக்கும் பரக்கத்
நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் (பரக்கத்) பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.
அல்குர்ஆன் 41:10
உலகில் இந்தப் பூமியில் மனித இனம் மட்டுமே உயிர் வாழவில்லை. ஊர்வன, பறப்பன, நீர்வாழ் உயிரினங்கள் போன்ற எண்ணற்ற உயிரினங்கள் பூமியில் வாழ்கின்றன. தாவர இனமும் அறிவியல் அடிப்படையில் உயிரினம் தான். கோடான கோடி உயிரினங்களுக்கும் தாவர வகைகளுக்கும் உணவு வழங்கும் ஓர் உன்னதத் தாயாக, ஊட்டச் சத்து வழங்கும் தானியக் களஞ்சியமாக பூமி திகழ்கின்றது. இன்று உலகில் வாழ்கின்ற மக்கள் தொகை 700 கோடியாகும்.
இப்போது வாழ்கின்ற மக்களுக்கும், ஏற்கனவே வாழ்ந்து மறைந்தவர்களுக்கும் உலகம் அழியும் நாள் வரை உலகில் பிறக்கப் போகின்றவர்களுக்கும் உணவு அளிக்கவிருப்பது இந்தப் பூமி தான்.
மழையில் அடங்கிய மகத்தான பரக்கத்
அண்மைக் காலத்தில் தமிழகத்தின் தென் பகுதி கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கி, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர் கூட வற்றிப் போய் விட்டது. அணைகளில் பாசனத்திற்கு அல்ல, குடிநீருக்குக் கூட தண்ணீர் இல்லாத அளவுக்குத் தரை தட்டியது.
ஊராக இருந்தாலும், ஆறாக இருந்தாலும் அதற்குத் தனது உணவு வளத்தை பூமி தர வேண்டும் என்றால் அதற்கு ஆதாரம் வான்மழை தான். இல்லையென்றால் மனித வாழ்வு அஸ்தமித்துப் போய் விடும். அந்த வான்மழைக்கும் அல்லாஹ் பரக்கத் என்ற வார்த்தையைத் தான் பயன்படுத்துகின்றான்.
அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால் வானிலிருந்தும், பூமியிலிருந்தும் (பரக்கத்) பாக்கியங்களை அவர்களுக்காக திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் (தீமை) செய்து வந்ததன் காரணமாக அவர்களைத் தண்டித்தோம்.
அல்குர்ஆன் 7:96
சந்ததியில் அடங்கிய சமுதாய பரக்கத்
இந்தப் பூமியில் வாழும் 700 கோடி மக்களும் யார் என்கிறீர்கள்? எல்லாம் நூஹ் நபியின் கப்பலில் இருந்தவர்கள் தான். வெள்ளம் வந்து விரோதிகள் அழிக்கப்பட்டு, கப்பல் தரையிறங்கிய போது கப்பலிலிருந்து இறங்கிய நூஹ் நபியின் சமுதாயத்தை நோக்கி அல்லாஹ் பரக்கத் என்ற வார்த்தையின் பன்மைச் சொல்லைப் பயன்படுத்துகின்றான்.
"நூஹே! உம் மீதும், உம்முடன் உள்ள சமுதாயங்கள் மீதும் (பரக்கத்) பாக்கியங்கள் பொழியவும், நம்மிடமிருந்து சாந்தி நிலவிடவும் இறங்குவீராக!'' என்று கூறப்பட்டது. சில சமுதாயங்களுக்கு சுக வாழ்வை அளிப்போம் பின்னர் துன்புறுத்தும் நமது வேதனை அவர்களை அடையும்.
அல்குர்ஆன் 11:48
மறுபடியும் வரும் "மண்'ணின் பரக்கத்
யுக முடிவு நாள் ஏற்படும் போது பூமியில் நிகழும் மாற்றங்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
அல்லாஹ் மழை பொழியச் செய்வான். அந்த மழை எந்த மண் வீட்டிலும், எந்த முடி வீட்டிலும் படாமல் இருக்காது. இறுதியில், பூமியைக் கழுவி, கண்ணாடி போன்று (சுத்தமாக) ஆக்கி விடும். பின்னர் பூமிக்கு, "நீ உன் கனி வர்க்கங்களை முளைக்கச் செய்வாயாக; உன்னிடமுள்ள வளங்களை (பரக்கத்தை) மறுபடியும் தருவாயாக'' என்று உத்தரவு பிறப்பிக்கப்படும்.
அன்றைய நாளில் (எந்த அளவுக்கு வளம் கொழிக்குமெனில்), ஒரு குழுவினர் சேர்ந்து ஒரே யொரு மாதுளம் பழத்தை உண்பர். அதன் தோல் அவர்கள் அனைவருக்கும் நிழல் அளிக்கும். அவர்களுக்குப் பால் வளமும் கிட்டும். எந்த அளவுக்கென்றால், பால் தரும் ஓர் ஒட்டகம் ஒரு பெரும் கூட்டத்துக்கே போதுமானதாயிருக்கும். பால் தரும் பசுவொன்று ஒரு குலத்தாருக்கே போது மானதாயிருக்கும். பால் தரும் ஆடொன்று உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டத்திற்கே போதுமான தாயிருக்கும்.
நூல்: முஸ்லிம் 5228
இந்த ஹதீஸிலிருந்து பரக்கத்தின் பொருளை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அதாவது குறைந்த வாழ்வாதாரத்தில் நிறைவான வளம் பெறுதல் என்று விளங்கிக் கொள்ளலாம்.
ஆட்டு மந்தையில் பரக்கத்
ஒட்டகத் தொழுவங்களில் தொழுவதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "ஒட்டகத் தொழுவங்களில் தொழாதீர்கள். ஏனெனில் அவை ஷைத்தான்களாகும்'' என்று பதில் சொன்னார்கள். அவர்களிடம் ஆட்டுத் தொழுவங்களைப் பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "அத்தொழுவங்களில் தொழுங்கள்! ஏனெனில் அவை அருள் (பரக்கத்) நிறைந்தவையாகும்'' என்று பதில் அளித்தார்கள்.
அறிவிப்பவர்: பர்ரா பின் ஆஸிப் (ரலி)
நூல்: அபூதாவூத் 493
இன்று உலகில் கோடிக்கணக்கான ஆடுகள் உணவுக்காக அறுத்துப் பலியிடப்படுகின்றன. அவை ஈனுகின்ற குட்டிகளோ மிகக் குறைவாக இருப்பினும் பலன்கள் மிக அதிகமாக இருக்கின்றன. பன்றிகள் அதிகமான குட்டிகள் போடுகின்றன. அவற்றின் பலன்கள் மற்றும் உணவுக்காக அறுப்பதும் மிக மிகக் குறைவு தான். இந்தக் கணக்கின்படிப் பார்த்தால் உலகில் ஏராளமான பன்றிகள் பெருகிப் போயிருக்க வேண்டும். ஆட்டினம் அழிந்து போயிருக்க வேண்டும். ஆனால் ஆட்டினம் பல்கிப் பெருகிக் கொண்டே தான் இருக்கின்றது.
இவையெல்லாம் அல்லாஹ்வின் மகத்தான அற்புதங்கள். பரக்கத்திற்குரிய அரிய சான்றுகள்.
இந்த பரக்கத்தை மணமக்கள் அடைய வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் திருமணத்தை எளிமையாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
ஆனால் மண்டபத் திருமணங்கள் இதற்கு நேர் மாற்றமானவை. மண்டபத்திலும் ஒரு சில எளிய திருமணங்கள் நடந்தாலும் அவை ஆடம்பரத்தின் அடையாளச் சின்னமாகத் தான் அமைகின்றன.
மண்டப வாடகையிலேயே பணக்கார வாடை தெரிய ஆரம்பித்து விடுகின்றது. அடுத்தபடியாக, மண்டப அரங்கத்தை அலங்கரிக்கும் வண்ண விளக்கு, அலங்காரங்கள் என்று அதன் பரிமாணம் அகன்று கொண்டே செல்கின்றது. எளிமைத் திருமணத்திற்கு இது எள்ளளவுக்கும் கட்டியம் கூறுவதாக இல்லை. ஏழையின் திருமணமாகவே இருந்தாலும் மண்டபத் திருமணம் ஒரு மாளிகைத் திருமணமாகக் காட்சியளிக்கின்றது.
நன்றி: ஏகத்துவம் மாத இதழ்

No comments:

Post a Comment

இவ்வாக்கம் குறித்த உங்கள் கருத்தை பதியத் தவறாதீர்கள்

செய்திகள்