3.12.11

இலங்கை முஸ்லீம்களை இலக்கு வைக்கும் சிங்கள பாசிசவாத இணையதளங்கள்.

 
கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை நாட்டை பிடித்திருந்த புலிப் பயங்கரவாதம் ஆளும் சுதந்திர முன்னனி ஆட்சிப் பொருப்பெடுத்து சில வருடங்களில் முற்றாக நாட்டை விட்டு துடைத்தெரியப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

பிரபாகரன் தலைமையில் இலங்கை மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் வேர் மண்ணோடு அழிக்கப்பட்டார்கள். இது ஒரு வரலாற்று சாதனை என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

தமிழீழம் என்ற பேரில் நாட்டு மக்களையே அழித்தது மட்டுமன்றி தன்னை நம்பிய தமிழ் மக்களையும் அழித்துத் துவம்சம் செய்து கொண்டிருந்த பயங்கரவாத இயக்கம் நாட்டை விட்டு துடைத்தெரியப்பட்டமைக்கு அரசாங்கத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.

இதே நேரம் ஜாதி, மத பேதமின்றி அனைவரும் ஒரு தாய் மக்களாக இந்நாட்டில் மதிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அடிக்கடி தனது பிரச்சாரங்களில் கூறி வருவதை நாம் அறிந்திருக்கிறோம்.

எதிர் கட்சியாக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சியை விட முஸ்லீம்கள் விஷயத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கொஞ்சம் அதிக கரிசனை காட்டுகிறது என்பதை நாம் மறுக்க முடியாது.

அதிலும் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இலங்கை அரசு முஸ்லீம் நாடுகளுடன் நெருங்கிய உறவுகளை பேணி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

அதிலும் குறிப்பாக கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பாலஸ்தீனத்துடன் தனது உறவை ஜனாதிபதி மேம்படுத்தி வருவது வரவேற்கத்தக்க விஷயமாகும். இதன் நினைவாக அண்மையில் பாலஸ்தீனத்தின் பிரதான பாதை ஒன்றுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பெயரும் சூட்டப்பட்டது.

இப்படி முஸ்லீம்களுடனும், முஸ்லீம் நாடுகளுடனும் ஜனாதிபதி சுமுகமான உறவைப் பேணி வரும் நிலையில் இணவாதத்தைத் தூண்டி முஸ்லீம்களுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் இடையில் பிரச்சினையை உண்டு பண்ணும் வகையில் சில பேரினவாத சக்திகள் செயல்படுவதை அரசாங்கத்தின் கவணத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொருப்பு நம்மீதுள்ளது.

இனத்துவேசமும் - இணையதள பயங்கரவாதமும்.

யுத்தத்தின் மூலம் இலங்கை மண்ணில் விதைக்கப்பட்ட இனத்துவேசம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள இவ்வேலை சில சிங்கள பாசித சிந்தனை கொண்டவர்கள் இணையதளங்களின் மூலம் இனத்துவேசத்தை பரப்ப நினைப்பது கவலைக்குறியதாகும்.

ஆம் கடந்த சில மாதங்களாக சிங்கள மொழியில் சில இணையதளங்கள் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் இஸ்லாத்திற்கெதிராகவும், முஸ்லீம்களுக்கு எதிராகவும் பல தீய கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. இது வரை காலமும் ஆங்கில மொழியில் கிருத்தவப் பயங்கரவாதிகளினால் பரப்பப்பட்ட இஸ்லாம் பற்றிய தவறான செய்திகளின் சிங்கள மொழியாங்கள் இந்த இணையதளங்கள் மூலம் பகிரப்படுகின்றன.

அண்மையில் இராஜ் என்ற சிங்கள பாடகர் ஒருவர் இஸ்லாமியப் பெண்களைக் கேவலப்படுத்தும் விதமாக பாடல் ஒன்றை வெளியிட்டமையும் அதற்கெதிராக முஸ்லீம்கள் கொதித்தெழுந்தவுடன் அரச ஊடகங்கள் அந்தப் பாடலை தடை செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

இப்படி காலத்திற்குக் காலம் மீடியாக்கள் வாயிலாக பலவிதமான அவதூறுகள் இஸ்லாத்திற்கெதிராக அள்ளி வீசப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

இணையதள பாவனையாளர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்தத் தளங்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகளையே சுமந்திருந்தாலும் பாமரர்களை நம்ப வைக்க இவர்கள் எடுக்கும் முயற்சியின் மூலம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை சீர் குலைக்கப்பட்டு கலவரங்கள் வெடிக்கும் அபாயம் உண்டாக்கப்படுகிறது.

யுத்தம் இல்லாமல் ஆக்கப்பட்டு அனைத்து மக்களும் நிம்மதியாக இருக்கும் இச்சந்தர்பத்தில் இப்படிப்பட்ட கசப்பான செயல்பாடுகள் அனுமதிக்கப்பட்டால் எதிர்கால இலங்கை மக்களின் சுமுக வாழ்கையை இது பாதிக்கும் என்பது தெளிவு.

அரசாங்கத்திடம் ஓர் வேண்டுகோள்.

யுத்தத்தை இல்லாமலாக்கி சமூக நிம்மதிக்கு வழியேற்படுத்தியதைப் போல் இனங்களுக்கு இடையில் துவேசத்தை உண்டாக்க நினைக்கும் இவ்வாரான இணைய தளங்களை தடை செய்ய அரசாங்கம் ஆவண செய்ய வேண்டும் என்பதே இலங்கை முஸ்லீம்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

நாட்டின் அமைதியைக் கெடுத்து மக்கள் மத்தியில் பிரச்சினைகளை உண்டாக்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நமது அவாவாகும்.

ஆளும் சுதந்திர முன்னனி அரசு இவ்விஷயத்தில் கூடிய கவணம் எடுத்து செயல்பட வேண்டுவதுடன், முஸ்லீம்கள் இப்படிப்பட்ட இணையதளங்கள் விஷயத்தில் கவணமாக இருப்பதுடன் இவற்றை மற்றவர்களுக்கு பரப்பாமல் இருக்கும்படியும் வேண்டிக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

இவ்வாக்கம் குறித்த உங்கள் கருத்தை பதியத் தவறாதீர்கள்

செய்திகள்