16.12.11

மனித வாழ்வும், பெருந்தன்மையின் முக்கியத்துவமும். (தொடர் - 01)

அன்பின் சகோதரர்களே! மனித வாழ்வும் பெருந்தன்மையின் முக்கியத்துவமும். என்ற இந்தத் தொடர் ஆக்கம் எனது நண்பர் சகோதரர் மனாஸ் அவர்களினால் எழுதப்படுகிறது. பெருந்தன்மை தொடர்பாக இஸ்லாம் சொல்லும் செய்திகள் என்ன? பெருந்தன்மையினால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றிய செய்திகளையெல்லாம் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் மூலம் கட்டுரையாளர் அழகாகத் தெளிவுபடுத்துகிறார். தொடர்ந்து படியுங்கள் உங்கள் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பதியுங்கள்.

இந்த உலகத்தில் மனித சமுதாயம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் அவர்களிடத்தில் எப்படிப்பட்ட உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று திருமறைக் குர்ஆனின் மூலமாகவும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மூலமாகவும் அல்லாஹ் நமக்கு கற்றுத்தந்துள்ளான். இந்த உலகத்தில் மனிதர்களின் குணங்களையும், அவர்களின் பொருளாதாரத்தையும் மற்ற செயல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது எல்லா மனிதர்களும் சமநிலையில் உள்ளனர் என்று யாராலும் சொல்ல முடியாது. அவர்களுக்கு மத்தியில் பல விதமான குணங்களையும் பண்புகளையும் கொண்டவர்களாக காணப்படுவதை நாம் இன்று காணக்கூடியதாக உள்ளது. இதுதான் அல்லாஹ்வின் நியதியாக உள்ளது.

உதாரணமாக ஒரு மனிதனின் கை விரல்கள் ஐந்தும் எப்படி ஒன்றுக் கொண்டு அளவில் வித்தியாசமாக காணப்படுகிறதோ அதே போன்று மனிதர்களின் நிலைகளும் மாறுபட்டதாக காணப்படுகிறது. முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எவ்வாறான உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று திருமறைக் குர்ஆன் முக்கியமான ஒரு அடிப்படையை நமக்கு கற்றுத் தருகிறது. அதுதான் பெருந்தன்மை என்ற உன்னதமான பண்பு.

பெருந்தன்மை என்ற இந்த உன்னதமான பண்பு முஸ்லீம்கள் அனைவரிடமும் காணப்பட வேண்டும். அதே போன்று உலகில் வாழக்கூடிய மனிதர்களில் அவர்கள் எந்த இனத்தவர்களானாலும் எந்த மதத்தவர்களானாலும் எந்த மொழியைப் பேசக்கூடியவர்களானாலும் அவர்களும் மனிதர்கள் தான் அவர்களுடனும் விட்டுக் கொடுப்புடனும் பெருந்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு கட்டளையிடுகிறது. 

உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். அல்குர்ஆன் (2:237)

நபி (ஸல்) அவர்கள் இந்தப் பெருந்தன்மையைப் பற்றி பறைசாற்றியது மட்டுமில்லாமல் அவர்களின் வாழ்க்கையிலும் பெருந்தன்மையாக நடந்து காட்டியது மட்டுமல்லாமல் அவர்களின் சத்தியத் தோழர்களுக்கும் இதனைக் கற்றுக் கொடுத்தார்கள். நபித் தோழர்கள் தங்களின் வாழ்க்கையில் நடந்த பல விதமான சம்பவங்கள் அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட போதல்லாம் அல்லாஹ்வுடைய வேதத்திற்கும் தங்களின் தோழரான நபியின்  பொன்மொழிகளுக்கும் செவி சாய்த்து நடந்து கொண்ட வரலாறுகளை எல்லாம் இந்தத் தொடரில் நாம் காண்போம். 

பெருந்தன்மை உடையவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகின்றான்.

வாங்கும்போதும், விற்கும்போதும், வழக்காடும்போதும் பெருந்தன்மையாக நடந்துகொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக!
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)  ஆதாரம் புகாரி(2076)

அல்லாஹ்வின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் பெருந்தன்மையாக நடக்க வேண்டும் அதுமட்டுமின்றி இஸ்லாமியர்கள் அதிகமாக வியாபாரத்தில் ஈடுபடக்கூடியவர்களாக இருப்பதால் அவர்கள் வியாபாரம் செய்யும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு மேற்கூறப்பட்ட இந்த நபி மொழியை நடைமுறைப்படுத்தினால் அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக் கொள்ளமுடியும். என்று நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.

ஆனால் முஸ்லீம்களில் எத்தனை பெயர்களிடம் இந்தப் பெருந்தன்மையுள்ளது. என்று தேடிப்பார்த்தால் மிகவும் அரிதாகத்தான் இந்தப் பண்புடையவர்களைக் காணமுடியும். அந்த அளவுக்கு இந்தப் பண்பு இன்று நம்மிடம் இருந்து மறைந்துள்ளது. எனவே கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பண்பை நாமது வாழ்வில் வளர்த்துக் கொள்ள வேண்டும். 

பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுங்கள் என்று சொன்ன அல்லாஹ்வின் தூதரின் வாழ்க்கையில் எப்படிப் பெருந்தன்மையாக நடந்து கொண்டார்கள் என்று நாம் முதலில் கண்டு கொள்வோம். இன்று தொலைக் காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் அடிக்கடி படிக்கும் செய்திகளில் ஒன்றுதான் அரசியல் தலைவர்கள் ஆன்மிகத் தலைவர்கள் செல்லும் இடங்களில் கட்டுக் கடங்காத கூட்டத்தால் அவர்களைக் காணவந்த ரசிகர்கள், பக்தகோடிகள் மத்தியில் நடக்கும் சில அதம்பாவிதங்களின் காரணமாக அதனைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர என்னென்ன முயற்சிகளை எடுக்க முடியுமோ அத்தனை முயற்சிகளை எடுத்தும் சில நேரங்களில் அவர்ளை பொலிஸார் தடியடி நடத்தி கலைப்பதைப் பார்க்கிறோம் இப்படி நெரிசல் காரணமாக சில வேலை காவலுக்கு வந்த பொலிஸார் அவர்களின் ஆதரவாளர்களால் தாக்கப்படுவதையும் அதனால் பொலிஸார் தலைவர்கள் என்று கூடப் பார்க்காமல் தாக்குதல் நடத்துவதால் பொலிஸாரின் வாகனங்கள் மற்றும் அவர்களின் உடமைகளும் சூறையாடப்படுவதுடன் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையும் இன்று பார்க்க முடிகின்றது. இப்படி நடந்தும் கூட அரசியல் தலைவர்களோ அல்லது ஆன்மீகத் தலைவர்களோ தங்களின் ஆதரவாளர்களை அமைதி காக்கும் படி சொல்வதற்கு பதிலாக இதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த சந்தர்ப்பத்தில் பெருந்தன்மையோடு நடந்து கொண்டால் அல்லது அவர்களை மன்னித்து விட்டால் இப்படியான எந்த அசம்பாவிதங்களும் நடைபெறாது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இப்படியான எத்தனை சந்தர்ப்பங்கள் வந்தும் கூட அவர்கள் ஒரு முறை கூட அப்படி நடந்து கொள்ள வில்லை என்பதற்கு ஏராளமான சம்பவங்களைப் பார்க்க முடிகிறது.

நபி (ஸல்) அவர்களின் பெருந்தன்மை.

(ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், "(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதை யேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது "அகபா (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். "கர்னுஸ் ஸஆளிப்' என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழளிட்டுக்கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, "உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்'' என்று கூறினார்கள். 

உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி, பிறகு, "முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)''  என்று கூறினார். உடனே, "(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)'' என்று சொன்னேன். 
அறிவிப்பவர்: ஆயிஷா ரலி அவர்கள் ஆதாரம் புகாரி (3231)

இந்த வரலாற்றைப் ஒவ்வோரு அரசியல் தலைவர்கள் முதற் கொண்டு அடிமட்ட தொண்டர்கள் வரைப் படிக்க வேண்டும் இதைவிடவும் பெருந்தன்மைக்கு வேறு எதைத்தான் பார்க்கமுடியும் அந்த அளவுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் பெருந்தன்மையாக நடந்துள்ளார்கள்.

விஷம் வைத்தவளைக் கூட விடுதலை செய்தவர்.

நபி (ஸல்) அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்ட ஆட்டிரைச்சியைக் கொடுத்து அவர்களைக் கொலை செய்ய முட்பட்ட யூதப் பெண்னை நபித்தோழர்கள் கொல்லுவதற்கு அனுமதி கேட்ட போது கூட நபியவர்கள் அந்தப் பெண்னைக் கொல்ல அனுமதி வழங்க வில்லை பெருந்தன்மையாக அவர்கள் நடந்து கொண்டார்கள்.

யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். "அவளைக் கொன்று விடுவோமா?'' என்று (நபி (ஸல்) அவர்கüடம்) கேட்கப்பட்டது.  அவர்கள், "வேண்டாம்'' என்று கூறி விட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், ஆதாரம்: புகாரி 2617

 நபிகள் நாயகத்தின் பெருந்தன்மைக்கு பறைசாற்றும் மற்றொரு நிகழ்ச்சி 

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்து நாட்டை நோக்கி ஒரு புனிதப் போருக்காகச் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பிய போது அவர்களுடன் நானும் திரும்பினேன். அப்போது முள்மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்துவிட்டது.  உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மரங்களின் நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய் விட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (கருவேல) மரத்தின் கீழே தங்கினார்கள். தமது வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள். நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். (நாங்கள் கண் விழித்துப் பார்த்தால்) அப்போது அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி இருந்தார். நபி (ஸல்) அவர்கள், "இவர் நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது (நான் மரத்தில் தொங்கவிட்டிருந்த எனது) வாளை எனக்கெதிராக உருவிக் கொண்டார். நான் கண் விழித்துப் பார்த்தபோது இவரது கையில் உறையிலிருந்து உருவிய (எனது) வாள் இருந்தது. இவர், "என்னிடமிருந்து உன்னை யார் காப்பாற்றுவார்?'

என்று கேட்டார். நான் "அல்லாஹ்' என்று (மூன்றுமுறை) கூறினேன்'' என்று சொன்னார்கள். அந்தக் கிராமவாசி (அங்கே) அமர்ந்திருந்தும்கூட, அவரை நபியவர்கள் தண்டிக்கவில்லை 
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) ,ஆதாரம் புகாரி(2910)

தன்னைக் கொள்ள வந்தவனைக்கூட மன்னித்து விட்ட பெரும் தலைவரை இன்று உலகில் காணமுடியுமா? என்ற அளவுக்கு நபிகள் நாயகம் பெருந்தன்மையுடன் நடந்துள்ளார்கள். 

 ஹுனைன் யுத்தத்தில் இருந்து திரும்பி வரும் போது கிராம வாசிகள் நபி (ஸல்) அவர்களிடம் உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி நபியவர்களை சூழ்ந்து கொண்டார்கள் எந்த அளவுக் கென்றால் ஒரு முள் மரத்தில் அவர்களின் சால்வை மாட்டிக் கொண்ட போது கூட பெருந்தன்மையாக நடந்து கொண்டார்கள். தனது தோழர்களிடம் அவர்களை தாக்குமாறு கட்டளையிட்டிருந்தால் அந்தக் கிரமமே அன்றுடன் காலியாகி இருக்கும் ஆனால் எந்த ஒரு தீங்கையும் அந்த மக்களுக்கு நபியவர்கள் செய்யவில்லையென்றால் இதனை எந்த வார்த்தைகளைக் கொண்டுதான் வரணிக்க முடியும்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹுனைன்' போரிலிருந்து திரும்பி வந்த போது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து கொண்டு (தர்மம்) கேட்கலானார்கள்; "சமுரா' என்னும் (கருவேல) முள் மரம் வரை நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளி விட்டார்கள். நபியவர்களின் சால்வை முள்மரத்தில் சிக்கிக் கொண்டது. ஆகவே நபி (ஸல்) அவர்கள் சற்று நின்று, "என் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள்மரங்களின் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் கூட அவற்றை உங்க ளிடையே பங்கிட்டு விட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காண மாட்டீர்கள்; பொய்யனாகவும் காண மாட்டீர்கள்; கோழையாகவும் காணமாட்டீர்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் ,ஆதாரம் புகாரி(2821)

பெருந்தன்மையோடு நடக்க வேண்டும் என்று கட்டளையிட்ட நபி (ஸல்) அவர்கள் தர்மம் செய்யும் போது கூட பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும். என்று கீழ் வரும் செய்தியில் இரத்தினச் சுருக்கமாக சொல்லிக் காட்டுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக்கொள்ளாதே! அல்லாஹ் உன்மீது (தன் அருளைப் பொழியாமல்) முடிந்து வைத்துக்கொள்வான். (எனவே) உன் சக்திக்கேற்ப சிறிதளவாவது தர்மம் செய்! 
அறிவிப்பவர் அஸ்மா (ரலி) அவர்கள் ஆதாரம் புகாரி (1434) 
  
அல்லாஹ்வுக்காக கொடுக்கின்ற விசயத்தில் கஞ்சத்தனமுடையவர்களாக இருக்கக்கூடாது. அப்படி நாம் கஞ்சத்தனம் செய்தோம் என்றால் செல்வத்தை யார் நமக்கு தந்தவனோ அந்த அல்லாஹ் அவனின் அருட்கொடையில் இருந்து வழங்குவதை தடுத்து விடுவான். நமது சக்திக்குட்பட்ட வகையில் தர்மம் செய்ய வேண்டும் என்று இந்த செய்தியில் அஸ்மா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள்.

வளரும் இன்ஷா அல்லாஹ்...............

No comments:

Post a Comment

இவ்வாக்கம் குறித்த உங்கள் கருத்தை பதியத் தவறாதீர்கள்

செய்திகள்