இலங்கைத் திருநாட்டில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்கள் மத்தியில் எத்தி வைக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் பல எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இறைவனின் மிகப் பெரும் கருணையினால் ஏகத்துவத்தை ஒளிவு மறைவின்றி மக்கள் மத்தியில் எத்தி வைத்து வருவது அனைவரும் அறிந்ததே !
குா்ஆனும், ஸஹீஹான ஹதீஸ்களும் மாத்திரம் தான் எமது கொள்கை இதற்கு மாற்றமாக எந்த நபித் தோழர் சொன்னாலும், எந்த இமாம் சொன்னாலும், சவுதிய அறிஞர்கள் சொன்னாலும் அவற்றைத் தூக்கியெறிந்து விட்டு குா்ஆனையும், ஹதீஸ்களையும் மாத்திரம் பிரச்சாரம் செய்வதில் உருதியாக இருக்கிறோம்.
நாடு முழுவதும் இதுவரைக்கும் 20க்கும் மேற்பட்ட ஊர்களில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தனது கிளைகளை அமைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தத் தருணத்தில் நமது பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டையாக பித்அத் வாதிகளை விட பெயர் தாங்கித் தவ்ஹீத் வாதிகள் தான் அதிகமாக இருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் கசப்பாக இருந்தாலும் சொல்லியே ஆக வேண்டும்.
அந்த வகையில் பலர் நமக்கு எதிராக பல செய்திகளை உண்மைக்குப் புரம்பாக பேசியும், எழுதியும் வருகிறார்கள்.
நமக்கெதிராக எழுதுபவர்களோ, பேசுபவர்களோ அதனை மக்கள் மத்தியில் பொது மேடையில் பேசுவதற்குத் தயங்குவதுதான் வேடிக்கையாக உள்ளது.
அண்மையில் அக்கரைப்பற்று அன்சார் தப்லீகி அவா்கள் நமக்கு எதிராக ஒரு உரை நிகழ்த்தியுள்ளார்கள் அந்த உரையில் உள்ள அபத்தங்களை தோழுறித்துக் காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
தொடர்பில்லாத் தலைப்பும் அன்சார் மவ்லவியின் நினைப்பும்.
மீண்டும் மத்ஹபா என்ற தலைப்பில் அன்சார் மவ்லவி அவா்கள் உரை நிகழ்த்தியுள்ளார். உரையின் உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு முன் தலைப்பின் உண்மை நிலைப்பாட்டை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது மீண்டும் மத்ஹபா என்று தலைப்பிட்டு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தினராகிய எம்மை மீண்டும் ஒரு மத்ஹபைப் பின்பற்றுபவர்களைப் போன்று சித்தரிக்க முற்படுகிறார்.
ஆனால் இந்தத் தலைப்பைப் பேசுவதற்கு முன்பு மத்ஹபுக்கெதிரான உங்கள் பிரச்சாரத்தின் உச்சகட்டம் என்ன என்பதையும் மக்களுக்கு விளக்கியிருக்களாமே?
ஏதோ இலங்கையில் மத்ஹபுவாதிகளே இல்லாத அளவுக்கு உங்கள் பிரச்சாரத்தினால் மத்ஹபுவாதிகளின் கொள்கைகள் நொறுக்கப்பட்டுவிட்டது போலும். மத்ஹபே இல்லாத போது நாம் ஒரு புது மத்ஹபை கொண்டு வந்துள்ளதைப் போலும் தலைப்புப் போட்டுள்ளீர்களே ?
குா்ஆனையும், ஹதீஸையும் மாத்திரம் எந்தவிதமான விட்டுக் கொடுப்புமின்றி எடுத்துரைப்பது உங்கள் பார்வையில் மத்ஹபு என்றால் அந்த மத்ஹபில் இருப்பதில் நாம் பெருமைப்படுகிறோம்.
நாம் தக்லீத் (தனி மனித வழிபாடு) செய்கிறோமா?
உரையை ஆரம்பித்து ஒரு சில நிமிடங்களிலேயே தாங்கள் எந்த ரூட்டில் செல்ல ஆரம்பிக்கிறீர்கள் என்பதை அந்த உரையைப் பார்ப்பவா்கள் அறிந்து கொள்வார்கள்.
நாம் தவ்ஹீதுக்கு பதிலாக தக்லீத் செய்வதாக மக்கள் மத்தியில் ஒரு தோற்றத்தை உண்டு பண்ண முனைகிறீர்கள்.
உண்மையில் நாம் தக்லீதுதான் செய்கிறோம் என்றால் அதனை நான்கு சுவர்களுக்குள் இருந்து வீடியோவில் பதிவதை விடுத்து மக்கள் மன்றில் விவாதிப்பதற்கு தயாரா?
நாங்கள் பின்பற்றுவது குா்ஆனும், ஹதீஸும் மாத்திரமே தவிர எந்த ஒருவரையும் கண் மூடிப் பின்பற்றவும் இல்லை அப்படிப்பட்ட தேவையும் நமக்கில்லை.
அடுத்தவர்களின் மேடையில் ஏற மாட்டோம் மற்றவர்களை எமது மேடையில் ஏற்ற மாட்டோம் என்பதுதான் உங்கள் பார்வையில் மத்ஹபாக தெரிகிறதென்றால் உங்களிடம் சில கேள்விகளை நாம் முன்வைக்கிறோம் அதற்கு பதில் தரத் தயாரா?
நாங்கள் அடுத்தவர்களின் மேடையில் ஏறவும் மாட்டோம் மற்றவர்களை உங்களைக் கூட எங்கள் மேடைகளில் ஏற்றவும் மாட்டோம்.இது எங்கள் நிர்வாகக் கொள்கையாக நாம் வைத்திருக்கிறோம்.
நீங்கள் தான் எல்லா மேடைகளிலும் ஏறுவீர்கள் சத்தியத்தை உடைத்துச் சொல்வதற்காக அனைவரையும் அனைத்து மேடையிலும் ஏற்ற வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறீர்கள். அப்படியானால் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மர்கசில் தவ்ஹீத் பெயரில் உள்ளவர்களை நீங்கள் ஏற்றுவீர்களா? அப்படி ஏற்றுவதில்லையே?
உங்கள் மர்கசுக்கு மட்டும் தனிச் சட்டம் மற்றவர்களுக்கு வேறு சட்டமா?
உங்கள் மர்கசிலும் அனைவரையும் ஏற்றவோம் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் ஏற்ற மறுத்தவர்களை நாம் காட்டத் தயார்.
ஒரு பேச்சிற்கு நீங்கள் சொல்வது தான் சரி அனைவரும் அனைத்து மேடைகளிலும் ஏறலாம் என்ற ஒரு நிலைபாட்டை எடுத்தால் என்ன நடக்கும் என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
உதாரணத்தி்ற்கு அன்மையில் கொழும்பில் நடந்த ஒரு முக்கிய நிகழ்ச்சியை பற்றி ஒரு சில கேள்விகளை நாம் உங்களிடம் முன்வைக்கிறோம்.
ஜம்இய்யதுஷ் ஷபாபின் தலைமையில் இலங்கையில் இருக்கும் பல தவ்ஹீத் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து டாக்டர் ஸாக்கீர் நாயக்கை இலங்கைக்கு அழைத்துவந்து ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள்.
இந்த நிகழ்சியில் நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ள ஏ.ஸி.டி.ஜெ, ஐ.ஐ.ஆர்.ஓ, ஜே.ஏ.எஸ்.எம். போன்ற பல நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டன.
நிகழ்சியில் ஸாக்கீர் நாயக்கின் உரைக்கு முன்பு பேசியவர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி அவா்கள்.
அதைத் தொடர்ந்து தவ்ஹீதுக்கே ஆப்பு வைப்பதற்கு கங்கணம் கட்டிச் செயல்படும் அலவி மவ்லானா பேசினார் அதன் பின் ஸாக்கிர் நாயக் பேசினார்.
இப்போது நமது கேள்வி என்னவெனில்………
கொள்கையை உடைத்துச் சொல்ல வேண்டும் அதனால் மேடை வித்தியாசம் இன்றி அனைவரும், அனைத்து மேடைகளிலும் ஏற வேண்டும் என்று சொல்லும் நீங்கள் உங்கள் மர்கசில் ரிஸ்வி முப்திக்கு ஜும்மா கொடுப்பீர்களா?
அனைவரும் எல்லா மேடைகளிலும் ஏறவேண்டும் என்றால் அவருக்கும் உங்கள் சென்டரில் இடம் கொடுக்களாமே?
அது பரவாயில்லை இலங்கை வந்த ஸாக்கீர் நாயக்கை அழைத்து வந்தவா்கள் நீங்கள் சொல்லும் தவ்ஹீத் இயக்கங்கள் தான் அந்த இயக்கங்களின் இஸ்லாமிய அகீதாவின் நிலை தற்போது எங்கு சென்றிருக்கிறது தெரியுமா?
இறைவனுக்கு உருவம் இருக்கிறது என்பது இஸ்லாமிய அடிப்படை (இந்த அடிப்படையில் தான் தாங்களும் இருப்பீர்கள் என்று நினைக்கிறோம்) ஆனால் ஸாக்கீர் நாயக் தனது உரையில் இறைவனுக்கு உருவம் இல்லை என்று பட்டவர்த்தனமான பேசினார் அதனை தட்டிக் கேட்பதற்கு அங்கிருந்த தவ்ஹீத் வாதிகளால் முடிந்ததா?
இல்லையே? அவர் அப்படிப் பேசவில்லை தமிழ் மொழியாக்கத்தில் தவறிழைத்துவிட்டார்கள் என்றெல்லாம் காரணம் சொல்ல வராதீர்கள் ஆங்கிலத்திலேயே அப்படித்தான் பேசுகிறார்.
ஷபாபின் கட்டுப் பாட்டில் உள்ள மேடையில் ஷபாபினால் அழைத்து வரப்பட்டவர் இஸ்லாமிய அடிப்படையைத் தகர்த்தெரியும் ஒரு கருத்தை முன்வைக்கிறார் அதைத் தடுப்பதற்கு அங்கிருந்தவர்களுக்கு தைரியமில்லை இவா்கள் எல்லாம் தவ்ஹீத் வாதிகள் என்று சொல்லி இவா்களின் மேடையில் எங்களையும் பங்கு போடச் சொல்லி இஸ்லாத்தின் அடிப்படையையே குழி தோண்டிப் புதைக்கப் பார்க்கிரீர்கள்.
அந்த நிகழ்ச்சிக்கும் உங்களுக்கும் தொடர்பில்லை என்று சொல்லி தப்பிக்க நினைக்காதீர்கள். அப்படி நினைத்தால் அதில் கூட பல கேள்விகள் எழும்.
1. உங்களுக்கும் அந்த நிகழ்ச்சிக்கும் தொடர்பில்லை என்றால் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஷபாப், ஏ.ஸி.டி.ஜெ, ஐ.ஐ.ஆர்.ஓ, ஜே.ஏ.எஸ்.எம் போன்ற நிறுவனங்கள் பற்றிய உங்கள் நிலைபாடு என்ன?
2. இல்லை அந்த நிகழ்ச்சிக்கு நானும் தொடர்பாக இருந்தேன் என்று நீங்கள் சொன்னால் இதுதான் உங்கள் சத்தியப் பிரச்சாரமா?
3. அந்த நிகழ்ச்சிக்கு மாத்திரம் தான் நான் தொடர்பில்லை மற்ற எல்லா விஷயங்களிலும் நான் தொடர்பாகத் தான் இருக்கிறேன் என்று சொல்வீர்களானால்,இறைவனுக்கு உருவம் இல்லை என்று சாக்கிர் நாயக் சொன்ன போது அதனை தட்டிக் கேட்க திராணியற்ற கொள்கை(?) வாதிகளுடன் தான் உங்கள் கூட்டு நிலைக்கிறதா?
4. தாடி வெட்டலாமா? கூடாதா? என்பதற்காக ஒரு சி.டி யே பேசிய நீங்கள் இந்த இயக்கங்கள் அனைத்தும் இப்படிப் பட்ட ஒரு நாடகத்தை நடத்தியதைப் பற்றி வாய் திறக்கவில்லையே அது ஏன்? ஒற்றுமை குழைந்து விடுமோ?
5. அந்த சி.டியை பார்ப்பவர்களுக்கு உங்கள் நிலைபாடு என்ன என்பது தெளிவாகவே தெரிந்து விடும் தாடி வெட்டவே கூடாது என்று பேச வந்த நீங்கள் இறுதியில் வெட்டலாம் என்று முடிவு சொன்னதும் வீடியோ பதிவாகித் தான் உள்ளது.
பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறோம்.
நீங்கள் சொல்வதைப் போல் தனிமனித வழிபாடு நடத்தி, மத்ஹபு பிரச்சாரம் தான் நாம் செய்கிறோம் என்றால் அதனை பொது மேடையில் விவாதித்து நீரூபிக்கத் தயாரா?
தாடி வெட்டலாமா? என்பதில் தொடங்கி நாம் தக்லீது செய்கிறோமா? என்பது வரை அனைத்தையும் விவாதிப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோம் நீங்கள் தயாரா?
இல்லை நான் தயாரில்லை என்று கூறுவீர்களானால் எதற்காக இப்படி பேச வேண்டும்?
ஒரு கருத்தை பேசத் தெரிந்தவருக்கு அதைப் பற்றி விவாதிப்பதற்கும் தைரியம் இருக்க வேண்டும் என்ற அடிப்படைத் தத்துவம் உங்களுக்குத் தெரியாதது அல்லவே?
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கெதிராக நீங்கள் ஒரு உரையே நிகழ்த்தும் அளவுக்கு தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரம் உங்களை ஆட்டம் காண வைத்துள்ளது என்பது மாத்திரம் உண்மை.
ஆதலால் நீங்கள் சொல்வது சத்தியமெனில் பகிரங்க விவாதக் களத்தில் அதை நிரூபிக்க முன் வாருங்கள் நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.
www.sltjweb.com