13.3.11

தேசப்பற்று என்றால் இலங்கை கிரிக்கெட் அணியை ஆதரிப்பது என்று அர்த்தமாம்?


திலங்க சுமத்திபால எம்.பி யின் அகராதி விளக்கம்.
RASMIN M.I.Sc 

ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாக இந்நாட்டை மாற்றுவேன் என்று அடிக்கடி கூறுவார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. யுத்தத்தை வெற்றி கொண்ட சந்தோஷம், உண்மையில் யுத்தம் அற்ற அமைதியான நாடாக இலங்கையை மாறுவதற்கு ஜனாதிபதி எடுத்த முஸ்தீபுகள் ஒரு வகையில் ஆசியாவின் ஆச்சர்யம் தான்.

உலகில் இருக்கும் தீவிரவாத இயக்கங்களில் பயங்கரமான இயக்கம் யாராலும் மோத முடியாத அமைப்பு என்ற ஒரு கர்வப் பெயரை தனக்கு சூட்டிக் கொண்டு தீவிரவாத உலகில் முடிசூடா மன்னனாக(?) இருந்த விடுதலைப் புலிகளை அழித்து நாட்டில் சமாதானத்தை உண்டு பண்ணியதே இலங்கை ஆசியாவின் ஆச்சர்யமான நாடாகுவதற்கு போதுமானதுதான்.

இதே நேரம் யுத்த வெற்றியின் சந்தோஷத்தை கொண்டாடிய நேரத்தில் நாடு முழுவதும் ஜனாதிபதி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மேடைப் பேச்சுக்களில் கலந்து கொண்ட நேரத்தில் அடிக்கடி கூறிய ஒரு வாசகம் இன்னும் மக்கள் மனங்களில் ஆழப்பதிந்துதான் இருக்கிறது. ஏன் என்றால் சிங்கள பாசையை தாய் மொழியாகக் கொண்ட ஜனாதிபதி அவா்கள் அந்த வாசகத்தை மாத்திரம் தமிழில் தான் பேசினார். அதுதான் இந்த நாட்டில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற வித்தியாசம் இல்லை. இனி அனைவரும் இலங்கை மக்கள் தான் என்ற அழகிய கோஷம்.

ஆனால் இலங்கை நாட்டின் தற்போதைய நிலையோ அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை.

சிறுபான்மை மக்களை மதிக்கும் அரசாங்கமாக ஆளும் சுதந்திரக்கட்சி இருக்கிறது என்று ஜனாதிபதி கூறுகிறார். சிறுபான்மை மக்கள் யாழ்பானத்தில் தான் இருக்க வேண்டும் என்று சில பாராளுமன்ற உருப்பினார்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அப்படியானால் இங்குள்ள சிறுபான்மை மக்களின் நிலை என்ன? பெரும்பான்மை மக்கள் மத்தியில் அரசியல் இலாபமடை நினைக்கும் சில அரசியல் வாதிகள் முன்வைக்கும் கருத்துக்கள் நாளைய இலங்கையை பாதிக்காதா?

திலங்க சுமத்திபாலவின் அகராதி விளக்கம்.

இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் திலங்க சுமத்திபால அவா்கள் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும், சிங்கள, முஸ்லீம், இந்து, கிருத்தவ மக்களிடையே இன ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டிய நிலையில் இருந்து கொண்டு, இன ஒற்றுமைக்கு பதிலாக இனக்கலவரங்களை, சண்டை சச்சரவுகளை உருவாக்குவதைப் போல் பேசியிருக்கிறார் இதோ அவருடைய அகராதியில் நாட்டுப்பற்றுக்கான விளக்கமாக அவா் முன்வைக்கும் தகவல்கள்.

கடந்த வாரம் கொழும்பு பொரளையில் வனாத்தமுல்லை சகஹஸ்புர வீடமைப்புத் திட்டத்தில் சிங்கபுர வீடமைப்புத் திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பேசிய திலங்க சுமத்திபால எம்.பி   இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் போது கொழும்பு தெமடகொட அரச வீடமைப்புத் திட்டத்தில் வசிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தான் அணியின் வெற்றியை பட்டாசு கொளுத்திக் கொண்டாடியமையானது தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டு வேறு ஒரு நாட்டுக்கு ஆதரவாக செயற்படும் இவ்வாறானவர்கள் தாம் ஆதரவு தெரிவிக்கும் நாடுகளுக்குச் சென்று வாழ்வதே சிறந்தது எனக் குறிப்பிட்ட அவர் சிங்கக் கொடிக்கு மதிப்பளிப்பவர்கள் மட்டுமே இந்த நாட்டில் வாழத் தகுதியானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் அங்கு உரை நிகழ்த்துகையில்இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையினர் சகல உரிமைகளையும் பெற்று சந்தோசமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களில் சிலர் இலங்கைக்கும் இலங்கைக் கொடிக்கும் ஆதரவளிப்பதில்லை. இது குறித்து முஸ்லிம் தலைவர்கள் பலரிடமும் எடுத்துக் கூறியுள்ளேன்.

இந்த நாட்டுக்கும் சிங்கக் கொடிக்கும் ஆதரவளிக்காதவர்கள் இங்கு வாழாமல் அவர்கள் ஆதரவு வழங்குகின்ற நாடுகளுக்குச் சென்று வாழ்வதே சிறந்ததாகும்.

இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டும் சகல உரிமைகளையும் பெற்றுக் கொண்டும் இவ்வாறு நடந்து கொள்வதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

பொரளைப் பகுதியில் 60 வீதம் சிங்களவர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் தற்பொழுது 50 வீதமானவர்களே வாழ்கின்றனர். 
எனவே வீடமைப்பு அமைச்சினால் நிர்மாணிக்கப்படும் புதிய வீடமைப்புத் திட்டங்களில் முழுக்க முழுக்க சிங்கள மக்களுக்கே இடம் வழங்கப்பட வேண்டும்.

நாம் யாழ்ப்பாணத்தில் வீடு வாங்க முடியாது. அங்கு நாம் வாழவும் முடியாது. ஆனால் சிறுபான்மையினர் மிக வேகமாக கொழும்பில் வீடுகளை வாங்கி வாழுகின்றனர் எனவும் சுமதிபால எம்.பி. தெரிவித்தார்.

முஸ்லீம்கள் நாட்டுப் பற்று அற்றவர்களா?

இலங்கை அணியும், பாகிஸ்தான் அணியும் கிரிக்கெட் விளையாடிய போது பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை சந்தோஷமாக நினைத்து முஸ்லீம் பெயர் தாங்கிகள் கொண்டாடினார்கள் என்பதற்காக இலங்கையில் இருக்கும் முஸ்லீம்கள் நாட்டுப் பற்று இல்லாதவர்கள் என்பது பொருளாகுமா?

இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடிய தலைவர்களில் சிறுபான்மைத் தலைவா்கள் எத்தனை பேர் இந்நாட்டுக்காக போராடினார்கள் என்பது திலங்க சுமத்திபாலவுக்குத் தெரியாமல் இருக்களாம். ஆனால் வரலாறு தெரிந்தவர்கள் உண்மையை மறைக்கமாட்டார்கள் என்பது சுமத்திபாலவும் ஏற்றுக் கொள்ள வேண்டிய வாதம் தான்.

திலங்க சுமத்திபால அவா்கள் பேசிய கருத்துக்களின் விபரீதத்தை ஒவ்வொன்றாக நாம் ஆராய்வோம்.

கிரிக்கெட்தான் நாட்டுப்பற்றை தீர்மானம் செய்கிறதா?

கிரிக்கெட் விளையாட்டுத்தான் நாட்டுப் பற்றை தீர்மானிக்கிறது என்பது திலங்க சுமத்திபால எம்.பியின் வாதம் உண்மையில் கிரிக்கெட்டில் தான் நாட்டுப்பற்று தங்கியிருக்கிறது என்று ஒருவா் கூறினால் அவரை அறிவாளி என்று யாராவது ஒத்துக் கொள்வானா?

ஒரு பாராளுமன்ற உறுப்பினரான இருப்பவர் இவ்வளவு கிழ்த்தரமாகவா கருத்துத் தெரிவிப்பது?

நாட்டையே அச்சுருத்திக் கொண்டிருந்த யுத்தத்தை இலங்கை அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது. அந்நேரத்தில் இலங்கை மக்கள் அனைவரும் சந்தோஷக் கடலில் மூழ்கினோம் அப்போது யாராவது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்து கருத்துத் தெரிவித்திருந்தால் அவர்களைப் பார்த்து திலங்க சுமத்திபால இவ்வாறு சொல்வது சாரியானது.

அப்போது நாட்டுப்பற்றை தெரிவிக்க வேண்டியவன் தீவிரவாதத்திற்கு துணை நிற்கிறான் என்று அர்த்தமாகிவிடும்.

ஆனால் கிரிக்கெட்டில் ஒரு நாட்டு அணிக்காக அந்நாட்டு வீரர்களின் விளையாட்டிற்காக ஒருவன் அதனை ரசித்தால் அவன் நாட்டுப்பற்றற்றவன் என்று யாராவது கூற முடியுமா?

11 பேர் சேர்ந்து அணைவரினதும் கால நேரத்தையும், செல்வத்தையும் நாசப்படுத்தும் இந்த கிறுக்குத் தனமான விளையாட்டுத்தான் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் என்பது திலங்க சுமத்திபாலவின் அகராதிக்கு வேண்டுமென்றால் சரியாக இருக்களாம்.

தேசத்தின் ஒற்றுமையை விரும்பும் மக்களுக்கு அது சரியானதாக இருக்காது.

கிரிக்கெட்டில் இலங்கை அணியை ஆதரிப்பதுதான் சிங்கக் கொடியை மதிப்பது என்று திலங்க சுமத்திபாலவைப் போல் அனைவரும் நினைத்தால் பல நேரங்களில் இலங்கை நாட்டின் தேசிய கொடியை அரைக் கம்பத்தில்தான் பரக்கவிட வேண்டிவரும்.

இலங்கை அணி வெற்றி அடைந்தால் மாத்திரமே அது முழுக் கம்பத்தில் பரக்கமுடியும்.

ஜம்மிய்யதுல் உலமாவின் நாட்டுப்பற்றுத் தத்துவம் (?)

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் இலங்கை முஸ்லீம்கள் இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவிப்பதின் மூலம் தமது நாட்டுப் பற்றை வெளிப்படுத்த வேண்டும் என்று ஜம்மிய்யதுல் உலமாவும் அண்மையில் செய்தி வெளியிட்டு இருந்தது.

திலங்க சுமத்திபாலவின் அகராதியில் நாட்டுப் பற்றுக்கு என்ற விளக்கமோ அதே விளக்கம் தான் ஜம்மிய்யதுல் உலமாவின் அகராதியிலும் உள்ளது போலும்.

ஜம்மிய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி (?) இது தொடர்பாக கொழும்பு, புதுக்கடை ஜும்மா பள்ளியில் ஜும்மா உரையும் நிகழ்த்தினாராம்.

நாட்டுப் பற்றை தீர்மானிக்கும் அளவு கோள் இந்த கிரிக்கெட் என்றால் சில நேரம் கிரிக்கெட் சூதாட்டம் நடந்தால் இலங்கையே சூதாட்டத்தில் ஈடுபட்டுவிட்டது என்று சொல்வீர்களோ?

ஜம்மிய்யதுல் உலமா என்பது அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் மூலம் மார்க்கத் தீர்ப்பு வழங்க உருவாக்கப்பட்டதே தவிர மடமைத் தீர்ப்பு வழங்க உருவாக்கப் படவில்லை என்பதை அனைவரும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இனங்களுக்கிடையில் பிரச்சினையை வளர்ப்பதுதான் பாராளுமன்ற உறுப்பினரின் வேலையா?

நாட்டில் வாளும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் நாட்டு மக்கள் அந்தந்தப் பகுதியில் இருந்து சிலரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்புகிறார்கள்.

இப்படி அனுப்பப்படுபவர்கள் இண மத வேறுபாடு மறந்து செயல்பட வேண்டுமே தவிர மக்கள் மத்தியில் குரோதத்தை ஏற்படுத்த முனையக் கூடாது.

ஆனால் திலங்க சுமத்திபால அவா்களோ தேர்தல் நேரத்தில் பெரும்பான்மை மக்களின் வாக்குகள் தனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக சிறுபான்மை மக்கள் பற்றிய கெட்ட எண்ணத்தை அவா்கள் மனதில் தோற்றுவிக்க முயல்வது கண்டிக்கத் தக்க மிகவும் மோசமான கீழ்த்தரமான செயல்பாடாகும்.

அரசாங்க வீடமைப்பு திட்டம் சிறுபான்மை மக்களுக்கு இல்லையா?

இலங்கை அரசாங்கத்திற்கு உதவக் கூடிய வெளிநாடுகளின் பட்டியலில் அதிக இடங்களைப் பிடித்திருப்பது முஸ்லீம் நாடுகள் தான் சவுதி அரேபியாவில் ஆரம்பித்து குவைத், துபாய், பஹ்ரைன், கத்தர் என்று பல நாடுகளும் இலங்கையின் வளர்சிக்கான உதவிகளை நாளுக்கு நாள் வழங்கிக் கொண்டே இருக்கிறது.

ஏன் யுத்தத்தில் இலங்கை அரசு வெற்றி பெற வேண்டும் என்பதற்கா தனது ஆயுதங்களை வழங்கி உதவிய பாகிஸ்தான் திலங்க சுமதிபாலவுக்கு அப்போது இனிப்பான நாடாகத் தெரிந்ததா?

தங்கத்தைப் பார்த்து பித்தளை பல் இலித்த கதையாக உள்ளது சுமத்திபால எம்.பியின் கதை.

இலங்கைக்கான எண்ணை வளத்தில் மானிய அடிப்படையில் கச்சா எண்ணையை எந்த நாடு வளங்கியது முஸ்லீம் நாடுகள் தானே இவையெல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லையா? அல்லது தெரியாததைப் போல் நடிக்கிறீர்களா?

தூங்குபவனை எழுப்ப முடியும் ஆனால் தூங்குவதைப் போல் நடிப்பவனை ஒருக்காலும் எழுப்ப முடியாது.

முழுக்க முழுக்க முஸ்லீம் நாடுகளின் உதவிகளை பெற்றுக் கொண்டு அரசாங்க வீடமைப்புத் திட்டத்தில் சிங்கள மக்களுக்கு மட்டும் தான் வீடு கொடுக்க வேண்டும் என்றால் இது என்னே நியாயம்?

இதுவும் உங்கள் அகராதி விளக்கமா? திலங்க சுமதிபால அவா்களே?

யாழ்ப்பானத்தில் சிங்கள மக்களுக்கு வீடு வாங்க முடியாதா?

யாழ்பானத்தில் சிங்கள மக்களுக்கு வீடு வாங்கவும் முடியாதாம், அங்கு வாழவும் முடியாதாம். ஆனால் சிறுபான்மை மக்கள் கொழும்பில் வீடு வாங்கி வாழ்கிறார்களாம்.

இந்த நாட்டில் பிறந்த எந்த ஒரு குடி மகனும் இங்கு தான் அவன் வாழ வேண்டும் அல்லது இங்கு வாழக்கூடாது என்று சட்டம் சொல்வதற்கு யாருக்கும் தகுதியில்லை.

திலங்க சுமத்திபால எப்படி இலங்கை பிரஜையோ அவருக்கு இந்த நாட்டில் என்ன உரிமைகள் எல்லாம் இருக்கிறதோ அதே போல் தான் இந்த நாட்டில் இருக்கும் அத்தனை பேரும் அவா்கள் அனைவரும் இந்நாட்டின் மைந்தர்கள் 
அனைத்து உரிமைகளும் அவா்களுக்கும் உண்டு.

சிங்கள மக்கள் யாழ்ப்பானத்தில் வாழ முடியாது என்று யார் சொன்னார்கள்?  நாம் அங்கு வாழ்வதற்கு செல்லவில்லை. மற்றபடி இங்கு சிங்களவர்கள் வரக்கூடாது என்று யாராவது சட்டம் போட்டார்களா என்ன?
இன்றைக்கு யாழ்பானம் உள்ளிட்ட வடகிழக்கில் சிறுபான்மை மக்களுக்கு சரிக்கு சமனாக பெரும்பான்மை மக்களும் குடியேறித்தான் அல்லது குடியமர்த்தப்பட்டுத்தான் இருக்கிறார்கள்.

தனக்குத் தெரியவில்லை என்பதற்காக முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையைப் பார்ப்பது புத்திசாலியின் வேலையல்ல.

கொழும்பில் சிறுபான்மை மக்கள் வாழக்கூடாது பெரும்பான்மை மக்கள் மாத்திரம் தான் வாழ வேண்டும் என்பது எந்த சட்டத்தில் உள்ளது? கொழும்பு பெரும்பான்மை மக்களுக்கு மாத்திரம் உரிய இடமல்ல. சிறுபான்மை மக்களுக்கும் உரிய இடம்தான்.

கொழும்பு மட்டுமல்ல இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் இதுதான் நியாயம்.

ஜனாதிபதியிடம் சிறுபான்மை மக்கள் வேண்டுவது.

இலங்கையின் பயங்கவதாதம் முறையடிக்கப்பட்டு சுதந்திரமான சூழல் உருவாகியுள்ள இந்நேரத்தில் திலங்க சுமத்திபால போன்றவர்கள் மீண்டும் ஒரு இன மோதலை தூண்டுவதைப் போல் பேசுவது நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் விஷயமாகும்.

எதிர்கால இலங்கை இன்றை விட பல மடங்கு ஆசியாவின் ஆச்சரியமாக மாற வேண்டும் என்பதற்று அனைவரும் ஒத்துலைப்புடன் செயல்படுவதுதான் சரியான தீர்வாக அமையும்.

திலங்க சுமத்திபால போன்று அண்டை வீட்டுக்காரனின் விட்டை எறித்து குளிர்காய நினைப்பவர்களை அரசு அடையாளம் கண்ட தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் அரசாங்கத்தின் உதவிகள் அனைவரும் சரிசமனாக சென்றடைய வேண்டும் என்றும் சிறுபான்மை மக்கள் விரும்புகிறார்கள்.

அப்போதுதான் இலங்கை உண்மையில் ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாக மாற முடியும்.

இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் இலங்கையின் வளர்ச்சிக்கு வழி வகுத்த இஸ்லாமிய தலைவர்கள் பற்றிய தொடரை நமது தளத்தில் எதிர்பாருங்கள்

செய்திகள்