5.2.11

அக்பரின் தீனே இலாஹி ஒரு விமர்சனப் பார்வை.


ஹபீழ் ஸலபி 

அறிமுகம்:
இந்திய உபகண்டத்தை (1526-1858) காலப்பிரிவில் சுமார் 300 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்த ஒரு பேரரசையே வரலாற்றாசிரியர்கள் முகலாய சாம்ராஜ்யம் என அழைக்கின்றனர். இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் ஆட்சியின் பொற்காலம், முகலாயர் ஆட்சிக் காலப் பகுதியாகும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக இப்பேரரசு 1526 முதல் 1707 வரை சுமார் 150 வருட காலம் அக்பர், ஜஹாங்கீர், ஸாஜஹான், அவ்ரங்கஸீப் ஆகிய மன்னர்களின் கீழ் செழித்தோங்கிக் காணப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் சுட்டி நிற்கின்றன. ஆப்கானிஸ்தானிலிருந்து இந்திய உபகண்டத்தின் பெரும் பகுதியையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்த முகலாயர்கள் அரசியல், பொருளாதார, சமய, சமூக மாற்றங்களுக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்.
மத்திய ஆசியாவைச் சேர்ந்த துர்க்கிய இனத்தவரான பாபர் என்பவரே 1526இல் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார். மங்கோலியத் தளபதி ஜெங்கிஸ்கானின் வழித்தோன்றலான இவர், ஸமர்கந்தை ஆட்சி செய்த ஸுல்தான் மஹ்மூத் மிர்ஸா என்பவரின் நெருங்கிய உறவினராவார். ஆட்சிப் பீடமேற விரும்பிய பாபர், ஸமர்கந்தைக் கைப்பற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு, தோல்வி அடைந்தார். பி;ன்னர், ஆப்கானிஸ்தானில் பல வெற்றிகள் அவருக்குக் கிடைத்தன. 1504இல்-தனது 21வது வயதில் அவர் காபூல் நகரைப் பிடித்துக் கொண்டார்.
ஆப்கானிய லோதி சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியான டில்லியை ஆட்சி செய்து வந்த, இப்றாஹீம் லோதி என்பவரை 1526ல் தோற்கடித்த பாபர், தலைநகரான ஆக்ராவைக் கைப்பற்றிக் கொண்டார். இதுவே முகலாய சாம்ராஜ்யத்தின் ஆரம்பமாக அமைந்தது. 1527இல் தனது படைப் பலத்தைக் கொண்டு, இந்து ராஜபுத்திரர்களின் கூட்டாட்சியை வெற்றி கொண்ட அவர், தனது பேரரசை நிலை நிறுத்திக் கொள்வதற்குப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். வங்காளம், பீஹார் ஆகியனவும் அவரின் செல்வாக்கின் கீழ் கொண்டுவரப்பட்டன. முகலாயர்களின் ஆட்சிக்காலப் பிரிவு இந்திய உப கண்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது. பதினாறாம் நூற்றாண்டிலிருந்து அவர்கள் செல்வாக்குடன் இந்தியாவில் ஆட்சி செய்தனர்.
முகலாய மன்னர்கள் வரலாற்றில் குறிப்பிட்டுச் சிலாகிக்கப்படும் அளவு முக்கியத்தும் பெற்றுத் திகழ்கின்றனர். முஸ்லிம் உலக வரலாற்றில் பதினாறாம் நூற்றாண்டு முக்கிய காலப்பகுதியாகும். மேற்காசியாவிலும் ஆபிரிக்காவிலும் போல்கன்-ஐரோப்பிய நாடுகளிலும் உதுமானியர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கைப் பெற்றிருந்தனர். மத்திய ஆசியாவில் ஸபவிக்களின் செல்வாக்குக் காணப்பட்டது. தென்னாசியாவில் முகலாயர்களின் பரம்பரையில் முக்கியத்துவம் வாய்ந்த பல ஆட்சியாளர்கள் ஆட்சி புரிந்தனர்.
முகலாயர்களின் ஆட்சியின் கீழ் அனைத்து மதப் பிரினரும் சுதந்திரத்துடன் வாழ வழிவகுக்கப்பட்டது. மூன்று நூற்றாண்டு கால நீண்டதொரு ஆட்சி முறையை முகலாயர்கள் தொடர்வதற்கு, சமய சகிப்புத் தன்மையே காரணமாகக் கொள்ளப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். ஜனநாயக நாட்டில் கூட-பல கட்சிமுறை ஆதிக்கம் செலுத்தும் நவீன அரசியல் பாரம்பரியத்தில் கூட நீண்டகால ஆட்சி முறைமை சாத்தியமாகாத போது, எப்படி ஒரு சிறுபான்மை இனம், பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட ஒரு நாட்டை ஆட்சி செய்தது என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகும்.
இஸ்லாம், பலவந்தமாக மார்க்கத்தைப் பரப்புவதை அனுமதிக்கவில்லை. எனவே, முகலாயர்கள் சமயப் பொறுமையைக் கையாண்டார்கள். அவர்களது வணக்க வழிபாடுகளுக்குப் பூரண சுதந்திரத்தை வழங்கினர்கள். முகலாயப் படைகளில் இணைந்த இந்திய இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும்,    விதிவிலக்கு அளித்தனர். அரசாங்கத்தின் பாதுகாப்புடன் வாழந்த முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டுமே   வரி செலுத்த வேண்டியிருந்தது. அதிலும், வலது குறைந்தோர், வயோதிபர் ஆகியோருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
முகலாய ஆட்சியில் இஸ்லாமிய கலாசாரப் பண்பாடுகள் ஒரளவு குறிப்பிடடத்தக்க வகையில் பின்பற்றப்பட்டது. எனலாம். முஸ்லிம் அல்லாதவர்களும் கலாசார நடைமுறைகளிலும் பண்பாடுகளிலும் இஸ்லாமிய நடைமுறைகளைப் பின்பற்ற ஆரம்பித்தனர். இஸ்லாமியத்திற்குள் தங்களை ஐக்கிப்படுத்துவதை ஒரு கௌரவமாகவும் கருதினர். இன்றுவரை அதன் தடையங்கள் இந்துக்களிடம் காணப்படுகிறது. இந்துப் பெண்கள், முஸ்லிம் பெண்கள் போன்று முக்காடு அணிகின்றனர். தமது சாரியால் தலையை மூடிக்கொள்கின்றனர். இஸ்லாமும் இந்துத்துவமும் இணைந்த ஒரு கலப்புக் கலாசாரமே உருவாயி;ற்று எனக் கருதப்படுகிறது.
இனமாச்சாரியமும், ஜாதி வேறுபாடும், குல வேற்றுமையும் நிறைந்த இந்திய உபகண்டத்தில், இஸ்லாமிய சமத்துவத்தை  நிலைநாட்டுவதில் அதிக பங்களிப்பினைச் சட்ட ரீதியாக ஏற்படுத்தியவர்கள், முகலாய மன்னர்களே எனலாம். இதனால், பல இன மக்களும் இஸ்லாத்தில் காணப்பட்ட நல்ல அம்சங்களால் கவரப்பட்டு, இஸ்லாத்தைத் தழுவினர்.
இந்தியாவில் இஸ்லாம் நிர்பந்த-தந்திர உபாயங்கள் மூலமாகப் பரவவில்லை. இஸ்லாத்தை விளங்கி ஏற்றுக் கொண்ட பின்னர், மதம் மாறியவர்களை அறிவது மிக அரிதாகும். இஸ்லாத்தின் சமத்துவம் அதி உன்னதமானது என்பதை பல இன மக்களும் நன்கு அறிந்திருந்தனர். முகலாய மன்னர்கள், குறிப்பாக அக்பர் சமத்துவம் என்பதற்காக இஸ்லாத்தையே அதன் உயிர் நாடியான ஏகத்துவக் கொள்கையையே, விட்டுக் கொடுத்தார் என்ற கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டார்.
அக்பர் (1556 – 1605)
ஜலாலுத்தீன் முஹம்மது அக்பர் 1556இல் அரசரானார். நிர்வாகத் திறமை, தற்துணிவு, அரசியல் ஆளுமை, தந்திரோபாயங்கள், அரசனுக்குரிய குணாம்சங்கள் என்பன இவரிடம் மிகுதியாகக் காணப்பட்டன. இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு சமயங்களையும் ஒன்றிணைத்து ஆட்சி செய்ய முனைந்தார். ஹிந்துக்களைம் முஸ்லிம்களையும் இணைக்கும் நோக்குடன், பல புதிய திட்டங்களை தமது சுய விருப்புக்கேற்ப அவற்றை நடைமுறைப்படுத்த முனைந்தார். அவ்வாறான திட்டங்களில் ஒன்றாக விளங்கியதே. ‘தீனே இலாஹி’ எனும் அக்பரின் முக்கிய, புதிய சமய நோக்காகும். இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டைத் தகர்த்தெறியும், முற்றிலும் அதற்கு விரோதமான, முரணாக அமைந்த அவரது சமய நடைமுறைகளால் ஹிந்துக்கள் முகலாய ஆட்சியுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முனைந்தனர். அவர், இந்துக்களைத் திருப்தப்படுத்துவதற் காக இஸ்லாத்தை விட்டுக் கொடுத்து ஆடசியை ஸ்திரப்படுத்தினார். எனவே, முஸ்லிம்கள் அக்பரின் புதிய சமயக் கோட்பாட்டை ஏற்கவில்லை. மறுத்து விமர்சித்தனர்.
அக்பர் மன்னரின் ‘தீனே இலாஹி’ எனும் புதிய சமயக் கோட்பாடுகளுக்கு எதிராக செய்க் அஹ்மத்  அவர்களின் பிரசாரம் சிர்ஹிந்திப் பகுதியில் பெரும் வரவேற்பையும் செல்வாக்கையும் பெற்றது. அக்பரின் புதிய கொள்கைக்கும் முஸ்லிம்களிடத்தில் காணப்பட்ட தவறான சமய விளக்கங்களுக்கும் எதிராகப் பிரசாரப் பணியில் அவர் ஈடுபட்டார். அவரது அபார துணிவு, மன்னனையே எதிர்த்துக் கருத்துச் சொல்லும் தற்துணிவு, அபார ஆற்றல்,  சமய அறிவு என்பன ஏனைய முஸ்லிம்களையும், மற்ற சமூகத்தினரையும் சிந்திக்கத் தூண்டிற்று.
அக்பரின் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் பல உள்நாட்டுக் கலவரங்களும் கிளர்ச்சிகளும் இடம்பெற்றன. எனினும், விரைவில் இந்தியா மலைத் தொடருக்கு வடக்கே உள்ள முழு இந்திய உப கண்டப் பிரதேசத்தையும் அவர் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
மகா அக்பர் எனப் பின்னர் அழைக்கப்பட்ட அவரையே முகலாயப் பேரரசின் உண்மையான ஆரம்பகர்த்தா எனச் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். எனினும், இஸ்லாமிய அறிஞர்களாலும், மக்களாலும் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார். இஸ்லாத்தைப் பின்பற்றவோ, வளர்க்கவோ இவர் முனையவில்லை. மாறாக இஸ்லாமியப் போதனைகளை இந்துக்களின் திருப்திக்காக விட்டுக் கொடுத்தார்.
மாமிச உணவுகளை இந்துக்கள் புசிப்பதில்லை என்பதற்காக தானும் ஒதுக்கி வாழ்ந்தார்.
முஸ்லிம்கள் இணை கற்பிப்போரை மணக்கக் கூடாது. எனினும், அக்பர் 1562ல் பீகாரிமாலின் இந்து மகளை கலப்புத் திருமணம் செய்து கொண்டார்.
தனது வீட்டில் இந்து மத வழக்கங்களையம், சடங்கு சம்பிரதாயங்களையும் பின்பற்றியதோடு, நாட்டு மக்களையும், பின்பற்றச் செய்தார்.
அவர் இறுதித் தீர்ப்பு நாள், இறுதித் தீர்ப்பு நாளில் இறந்த உயிர்கள் மீண்டும் எழுதல் போன்றவைகளை மறுத்தார்.
மறுமையை நம்பாத காரணத்தினால் ‘தீனே இலாஹி’ என்ற மதத்தை உருவாக்கி, இஸ்லாத்தை அவமதித்தார். ‘தீன் இலாஹி’யில் புதிதாக இணைந்தவர்கள், பிரதி ஞாயிறு தோறும் வணக்கம்; புரிவார்கள். இவர்கள் தம் வணக்கச் சடங்கின் போது, கைகளில் தலைப்பாகை ஏந்தியவர்களாக அரசனின் காலில் விழ வேண்டும். அரசன் அவர்களிடம் தன்னுடைய உருவப்படத்தைக் கொடுப்பார். அக்பர் தன் காலில் விழுந்து வணங்குவதையும், தன் புதிய மதச் சடங்காகவே ஆக்கினார்.
பல விதிகளையும் சடங்குகளையும் இவருடைய ‘தீன் இலாஹி’யில் சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. அவை:
அரசன் காலில் விழுந்து வணங்க வேண்டும்.
பிறந்த நாளில் விருந்தளிக்க வேண்டும.;
பிறந்த மாதத்தில் இறைச்சி உண்ணக்கூடாது.
இறந்தவரின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ செய்யலாம்.
எரிக்கும்போதோ, புதைக்கும் போதோ தலை கிழக்கு நோக்கி இருக்கவேண்டும்.
இறைச்சிக் கடைக்காரர், மீனவர், பறவைகளைப் பிடிப்போர் ஆகியோரின் பாத்திரங்களை பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு, பல கோட்பாடுகளை உள்ளடக்கியதாக ‘தீனே இலாஹி’ காணப்பட்டது.
அரசியல், சமூகப் பங்களிப்பு:
அக்பர் மன்னராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதும், உள்நாட்டுக் கலவரங்களையும் கிளர்ச்சிகளையும் அடக்கி, அமைதியை நிலை நாடினார். அவர் கால ஆட்சியில் பல அரசியல், சமூக மாற்றங்கள் ஏற்பட்டன. அவர் மேற்கொண்ட பணிகளை பி;ன்வருமாறு நோக்கலாம்.
பாதைகள் பலவற்றை அமைத்து, வர்த்தகத்தை விருத்தி செய்தார்.
வரி அறவிடும் முறைகளை முற்றாகச் சீர்திருத்தினார்.
முஸ்லிமல்லாதவரை சகிப்புத்தன்iமையோடு அனுசரித்து நடந்த அவர், தன் அரச சபையில் விஞ்ஞானம், இலக்கியம், நுண்கலைகள் முதலியவற்றிற்கு முக்கிய இடம் வழங்கி, அவற்றின் வளர்ச்சிக்கு வழிகோலினார்.
அடிமைத்தனத்தை இல்லாதொழித்தார்.
விதவைகள் உடன் கட்டையேறும் கொடூர வழக்கத்தை தடை செய்தார்.
விதவைகள் மறுமணம் செய்ய வழிவகுத்தமை முதலியன அக்பர் செய்த மிக முக்கியமான பணிகளாகும்.
அத்தோடு பனாராஸிலும், பிருந்தாவனத்திலும், இரண்டு அழகிய கோயில்களை அக்பர் அமைத்தார். கோயில் கட்டிக் கொடுத்ததுடன் இவர் இஸ்லாம் தடை செய்த சிலை வணக்கத்தை ஆதரித்தார். அக்பர் காலத்தில் அமைக்கப்பட்ட ஆக்ரா கோட்டையின் ஜஹாங்கீர் மஹாலில் இந்துக்களின் சிற்பக்கலையும் இடம்பெற்றிருந்தது. இவரின் ஆட்சிக் காலத்தில்தான் இந்துஸ்தானி இசை முக்கியத்துவம் பெற்றது. இன்னும், இவர் காலவதை போன்று, ஏனையோர் காலத்தில் இசைக் கலை முக்கியத்துவப்படுத்தப்பட வில்லை.
கல்வி பெறாத பாமரனாக இருந்த போதிலும், அக்பர் தனது தீட்சண்யமான புத்தி, கூர்மையான சிந்தனை என்பவற்றின் மூலம், அபார திறமையுடன் ஆட்சி புரிந்தார். அவரது ஆட்சி சுமார் 49 வருடங்கள் நீடித்தது. அவர் 1605இல் தனது 63வது வயதில் காலமானதும், அவரது மூத்த மகனான ஸலீம் என்பவர் ஜஹாங்கீர் என்ற பெயரில் அரசரானார்.
49 வருடங்கள் ஆட்சி செய்த அக்பர், பல்வேறு அரசியல் சமூகப் பங்களிப்புக்களை மேற்கொண்டாலும், அவரது செயற்போக்கு, கொள்கை என்பன கடுமையான கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகின. செய்க் அஹ்மத் ஸிர்ஹிந்தி போன்றவர்கள் மன்னன் அக்பரின் கொள்கை கோட்பாட்டை மிகக் கடுமையாக எதிர்த்துப் பிரசாரம் செய்தனர். செய்க் ஸிர்ஹிந்தி பற்றி மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) குறிப்பிடும்போது, அக்பரின் மறுபக்கத்தையும், அதனை ஸிர்ஹிந்தி எதிர் கொண்ட பாங்கினையும் விரிவாக விளக்குகின்றார்கள்.
விமர்சனம்:
முகலாய மன்னர்கள் இறைமையையும், வரையறையற்ற உரிமைகளையும் தமதாக்கிக் கொண்டனர். அரசவைப் பிரதானிகளின் சொகுசான, படாடோப வாழ்க்கை, சட்ட விரோதமான முறையில் செல்வம் சேர்த்தல், அநீதியாகச் செலவு செய்தல், கொடுங்கோலாட்சி, அடக்குமுறை, இறைவனை மறந்து, நேர்வழியிலிருந்து விலகி நடத்தல் போன்ற அத்தனை தீமைகளும் அவர்களிடையே பரவியிருந்தன. சமய நோக்கில் சட்ட வரம்புக்குக் கட்டுப்படாத இவ்வவலநிலை அக்பரி;ன் காலத்தில் அதன் உச்ச கட்டத்தை அடைய, சீர் குலைவுகள் அவற்றின் எல்லைகளையே அண்மித்தன.
அக்பரின் அரசவையில் பொதுவாக இஸ்லாத்தைப் பற்றி நிலவிய கருத்து: ‘இஸ்லாமிய கலாசாரம் அறியாமையில் ஆழ்ந்திருந்த அரேபிய நாடோடிக் கூட்டத்தில் பிறந்ததாகும். ஆகையால், அது ஒரு நாகரீகமான, பண்பட்ட சமுதாயத்திற்குப் பொருத்தமற்றது என்பதிலும், நரகமும்-சுவர்க்கமும் கேலியும், நையாண்டியும் செய்யப்பட்டன. குர்ஆன் இறைவனின் வாக்கு என்பதும், அது இறைவனால் அருளப்பட்டது என்பது சந்தேகத்திற்குள்ளாகியது. மரணத்தின் பின் தண்டனையோ, வெகுமதியோ அளிக்கப்படும் என்பது நிச்சயமற்றதாகக் கொள்ளப்பட்டது. இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மிஃராஜ் நடைபெறாத ஒன்றாகக் கருதப்பட்டது.
நபிகள் (ஸல்) அவர்கள் பலதார மணத்திற்காகவும், அவர்கள் தொடுத்த புனிதப் போர்களுக்காககவும் பகிரங்கமாகக் கண்டனத்துக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அஹ்மத், முஹம்மத் போன்ற பெயர்கள் கூட வழக்கொழிக்கப்பட்டு, இவ்வாறான பெயர்கள் மாற்றப்பட்டன. உலகாசை பிடித்த ஆலிம்கள் தமது உரைகளிலும் எழுத்துக்களிலும் முஹம்மத் (ஸல்) அவர்களின் திருநாமத்தை உபயோகிக்கும் இடங்களில் அன்னாரைப் புகழ்ந்து, ஸலவாத்துச் சொல்லும் சொற்களைச் சேர்த்துக் கொள்ளும் வழக்கத்தைக் கைவிட்டு விட்டனர். சிலர் இறைதூதர் (ஸல்) அவர்களில் தஜ்ஜாலின் அடையாளங்கள் காணப்படுவதாகக் கூறும் அளவுக்கு துரோகிகளாக மாறிவிட்டிருந்தனர்.’
அக்பரின் நம்பிக்கைக்குரிய அரசவைப் பிரதானியான அபுல் பஸல் தொழுகை, நோன்பு, ஹஜ் முதலிய கடமைகளை அவமதித்து, அவற்றை இழித்துரைத்தார். அக்பரின் மாளிகை வளாகத்திற்குள் யாரும் தொழுகை நடத்தத் துணியவில்லை. ஆஸ்தான கவிஞர்கள், இஸ்லாத்தின் கடமைகளை கிண்டல் செய்து, புனைந்த கவிதைகள் பொது மக்களையும் அடைந்தன.

அக்பரின் காலத்திலேயே ‘பஹாய்’ கொள்கை முதன் முதலில் தோன்றியது. ‘இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் காலமுதல் இஸ்லாத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆயிரம் ஆண்டுகால எல்லை முடிவடைந்து விட்டது. ஆகையால், இஸ்லாம் காலங்கடந்ததாகிவிட்டது. எனவே, அதற்குப் பதில் புதியதொரு சமயக் கொள்கை அவசியமாகும்’ என்பது பஹாய்கள் கருத்தாகும். இக்கருத்து,அக்காலத்தில் மிகச் சக்தி வாய்ந்த பிரசார சாதனங்கள் எல்லாவற்றின் மூலமும் பரப்பப்பட்டது.
இந்து, முஸ்லிம்கள் கொள்கைகளை ஒன்றாகக் கலந்து, முகலாயச் சாம்ராஜ்யத்தைப் பலப்படுத்திப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்திற்காக, ஒரு புதிய கொள்கையுடைய, புதியதொரு சமயக் கொள்கை உருவாக்கப்பட்டது. முகஸ்துதிபாடும் இந்து அரச சபைப் பிரதானிகள், சக்கரவர்த்தியை மகிழ்விப்பதற்காக இந்து வேதாக மங்களிலிருந்து சில தீர்க்க தரிசனக் கூற்றுக்களை எடுத்துக்காட்ட முற்பட்டனர். ‘மகாத்மாவைக் கொண்ட ஒர் அரசன் பிறப்பான். அவன் பசுவைக் காப்பான்’ என்று கவிதை பாடினர்.
சில முஸ்லிம் அறிஞர்கள் ‘அக்பரே வாக்களிக்கப்பட்ட மஹ்தி (அலை)’ என்றும், அக்பர்தான் ‘இமாமுல் முஜ்தஹித்’ என்றும் நிரூபிக்க முனைந்தனர். அரசவைப் பிரதானிகளில் ஒருவரான ‘சூஃபி’ ஒருவர், அக்பரை ‘பரிபூரண மனிதன்’ என்றும் ‘தற்கால கலீபா’ என்றும், ‘பூமியில் இறைவனின் அவதாரம்’ என்றும் பிரகடனப்படுத்தினார்.
நீதியும், உண்மையும் எல்லாச் சமயங்களுக்கும் பொதுவானவை. ஆகையால், எந்தச் சமய நெறியும் இவ்வறப் பண்புகளுக்கு ஏகபோக உரிமை கோர முடியாது என்று, பொதுமக்கள் நம்பும்படி செய்யப்பட்டன.
எனவே, பல்வேறு சமய நெறிகளிலும் காணப்படும் நல்ல அம்சங்களை ஒன்று சேர்த்து, விரிவான ஒரு மதக் கொள்கையை உருவாக்கினால், பல்வேறு கருத்துக் களையும், மத நம்பிக்கைகளையும் கொண்ட மக்கள், அதனை விரும்பி ஏற்றுக் கொள்வர் என்றும் இதன் மூலம் பிரிவினை மனப்பான்மையையும் வகுப்புவாத வேறுபாடு களையும் மறந்து விடுவர் என்றும் கருதப்பட்டது. இப்புது மதத்துக்கு ‘தீனே இலாஹி’ என்று பெயர் சூட்டப்பட்டது.
அதன் அடிப்படைக் கொள்கை ‘லாஇலாஹ இல்லல்லாஹ் அக்பர் கலீபத்துல்லாஹ்’ என்பதாகும். (வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை அக்பர் அவனது பிரதிநிதி)
இப்புது மார்க்கத்தைத் தழுவியவர்கள் தம் பாரம்பரிய மார்க்கமும் மூதாதையரிடமிருந்து கேட்டும், பார்த்தும் அறிந்து கொண்ட மார்க்கமுமாகிய இஸ்லாத்தைப் பகிரங்கமாகத் துறந்து விட்டு, அக்பரின் ‘தீனே இலாஹியில் பக்தி சிரத்தையோடு நுழைய வேண்டும். இம்மதத்தைத் தழுவியவர்கள் ‘சேலர்’ என அழைக்கப்பட்டனர்.
இம்மதத்தில் முகமன் கூறும் முறையும் மாற்றப்பட்டது . ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதற்குப் பதில் ஒருவர் ‘அல்லாஹு அக்பர்’ என்று கூற, மற்றவர் பதிலுக்கு ‘ஜல்ல ஜலாலுஹு’ என்பார். இச்சொற்கள் மன்னனின் ஜலாலுத்தீன் அக்பர் என்ற பெயரிலிருந்து பெறப்பட்டவையாகும்.
சேலர்கள் தமது தலைப்பாகைகளில் சக்ரவர்த்தியின் உருவத்தை ஒத்த உருவங்களை அணியுமாறு பணிக்கப்பட்டனர். அரசனை வழிபடல் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். அரசனை அதிகாலையில் தரிசிப்பதன் மூலம் மக்கள் இதனை நிறைவேற்றினர். அரசனின் சன்னிதானத்தி;ல் ஆஜராவதற்கு யாருக்காவது அனுமதி கிடைத்து விட்டால், முதலாவதாக அவர் அரசருக்குச் சாஷ்டாங்கம் செய்வார். அவரே தம் பிரார்த்தனைகளையும் வேண்டுதல்களையும் நிறைவேற்று பவர் போல ஆலிம்களும், சூஃபிகளும் கூட அரசனுக்குச் சாஷ்டாங்கம் செய்தனர்.
இஸ்லாத்திற்கு முரணான இச்செயலை அவர்கள் ‘ஸஜ்தா தஹிய்யா’ (கண்ணியப்படுத்துவதற்காகச் செய்யும் ஸஜ்தா) ‘ஸமீன் போஸீ’ (பூமியை முத்தமிடல்) எனும் சொற்களைக் கொண்டு மறைக்க முயற்சி செய்தனர். இவை: ‘ஒரு காலம் வரும் அக்காலத்தில் மக்கள் சட்ட விரோதமானவற்றை சட்ட பூர்வமானவையாக ஆக்குவதற்காக, அவற்றின் பெயர்களை மாற்றி விடுவார்கள்’ என்ற நபியவர்களின் வாக்கை உறுதிப்படுத்தி நிற்கின்றன.
அக்பர் ‘எவ்வித பாராபட்சமும் பக்கச் சார்பும் இன்றி எல்லாச் சமய நெறிகளதும் நல்லம்சங்கள் யாவற்றையும் கொண்டே இப்புதிய மதம் உருவாக்கப்படும்’ என்று கூறியே ‘தீனே இலாஹியைத்’ தோற்றுவித்தார். துர்பாக்கியம் என்னவென்றால், இஸ்லாத்தை முற்றாக ஒதுக்கிவிட்டு மற்றெல்லா மதக் கொள்கைகளும் உள்ளடக்கப்பட்டன.
தீ வழிபாடு ஸொரஸ்திரியர்களிடமிருந்து இரவல் பெறப்பட்டு, எப்பொழுதும் அரச மாளிகையில் தீ எரிந்து கொண்டிருக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாலைப் பொழுது கிரியைகளுக்காக விளக்கு, மெழுகுதிரி எனபன ஏற்றப்படும் போது, அரண்மனையினர் எழுந்து நின்று, மரியாதை செய்யும் முறைமை உருவாக்கப்பட்டது. மணி அடித்தல், திரி மூர்த்திகளை வழிபடல் போன்ற சில கிரியைகள் கிறிஸ்தவ மதத்திலிருந்து இரவல் பெறப்பட்டன. எனினும், இந்து மதமே கூடிய ஆதரவைப் பெற்றது. ஏனெனில், அதுவே நாட்டின் பெரும்பான்மையினரின் மதமாகும். அவர்களின் உள்ளங் களை வென்று, சக்கராதிபத்தியத்தை உறுதிப்படுத்த வேண்டிய நிலை அக்பருக்கு ஏற்பட்டது. அதனால், இஸ்லாத்தைப் புறக்கணித்து, இந்து மதத்திற்கு கூடிய ஆதரவை வழங்கினார்.
பசுக்கள் அறுப்பதற்கு அக்பர் தடை விதித்தார். தீபாவளி, துஷேரா, ராகிபூணம், சிவராத்ரி போன்ற பண்டிகைகள் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன. அரச மாளிகையில் ‘ஹவான்’ கிரமமாக நடைபெற்றது. தினமும் நான்கு வேளை சூரிய நமஸ்காரம் இடம் பெற்றது. சூரியனின் ஆயிரம் பெயர்களும் பக்தி சிரத்தையோடு ஜெபிக்கப்பட்டன.யாராவது சூரியனின் ஒரு பெயரைச் சொன்னால், அதைக் கேட்டவர்கள் ‘அதன் புகழ் ஓங்குவதாக’ என்பர். நெற்றியில் திருநீறு தடவி தோளில் பூணூள் அணியப்பட்டதோடு, காமதேனு-பசுவுக்கு மிக்க உயர்ந்த கண்ணியம் அளிக்கப்பட்டது.
மறுபிறப்புக் கொள்கை முற்றாக ஏற்றுக் கொள்ளப்பட்ட துடன், பிராமணியத்திலிருந்து வேறு பல நம்பிக்கைகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இவ்வாறாகத்தான் பிற மதங்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. அதேவேளை மன்னனும் அரசவைப் பிரதானிகளும் இஸ்லாத்தைக் கேவலமாகவும் இழிவாகவுமே நடத்தினர். இஸ்லாத்தின் உண்மையான போதனைகள் அவமதிக்கப்பட, அரச சபைச் சூழலுக்கு ஏற்ப, இஸ்லாத்தை அவமதிக்கும் ஏதேனும் ஒன்று தத்துவரீதியாகவும், புரியாத புதிராகவும் சமர்ப்பிக்கப்பட்டால், அதுவே வானத்திலிருந்து அருளப்பட்ட போதனையாகக் கொள்ளப்பட்;டது. உணர்வுள்ள ஆலிம்கள் உண்மயான இஸ்லாத்தை எடுத்துரைத்தால், அல்லது ஒரு தீமையை அங்கீகரிக்காவிட்டால், அத்தகைய ஆலிம்களுக்கு தீண்டத்தகாத முட்டாள் எனப் பட்டம் சூட்டப்பட்டது.
அரசா    ங்கத்தின் கல்விக் கொள்கையும் இஸ்லாத்திற்கு நேரெதிராகவே தயாரிக்கப்பட்டது. அரபு, இஸ்லாமிய சட்டம், ஹதீஸ் ஆகிய பாடங்கள் போதிப்பதற்கு ஆதரவளிக்கப்பட வில்லை. இக்கலைகளைக் கற்றோர் கீழ்த்தரமானவர்களா கவும் பிற்போக்கானவர்களாகவும் கருதப்பட்டனர். அதே வேளை முற்றிலும் உலகியல் பயனுள்ள தத்துவவியல், கணிதம், வரலாறு போன்ற பாடங்களுக்கு அரசாங்கம் பேராதரவளித்தது. மொழியைப் பொறுத்தவரை சமஸ்கிருதம், இந்தி என்பன வளர்ப்பதற்குப் பேராவல் கொள்ளப்பட்டது.
அரபு மொழிச் சொற்கள் படிப்படியாகக் கைவிடப்பட்டன. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் இஸ்லாமிய சமயத்துறைக் கல்விக் கூடங்கள் கைவிடப்பட்டன. இவ்வாறு, அக்பரின் ஆட்சிக்காலம் காணப்பட்டபோது செய்க் அஹ்மத் ஷிர்ஹி;ந்தி பிறந்தார்கள்.
ஷெய்க் அஹ்மத் ஷிர்ஹிந்தியும் அக்பரும்:
அக்பரின் ஆட்சியின் தொடக்க காலத்தில் இருந்து மேற்கூறப்பட்ட சூழ்நிலையில்தான் சிர்ஹிந்த் என்னுமிடத்தில் ஷெய்க் அஹ்மத் அவர்கள் பிறந்தார்கள். அவர், அவரது காலத்தில் வாழ்ந்த பயபக்தி மிக்கவர்களின் மத்தியிலேயே வளர்ந்தார். அவர் தம்மைச் சூழ்ந்து, வளர்ந்து வந்த தீமைகளைத் தடுத்து நிறுத்துவதற்குச் சக்தியற்றவராக இருந்த போதும், ஈமானில் உறுதியானவராகவும், செயலில் சிறந்தவராகவும் விளங்கினார். அத்துடன் மற்றவர்களையும் நேர்வழி நடக்கத்தூண்டிக் கொண்டும் இருந்தார்.
ஷெய்க் அஹ்மத்  (1563 -1624) அவர்கள், அக்பரின் காலத்தில்  ஆன்மீகத் துறையில் மேலோங்கி நின்ற ஹஸ்ரத் பகீஹ் பில்லாஹ் அவர்களிடமிருந்த ஆழ்ந்த உணர்ச்சியும் பயனும் பெற்றார். ஷெய்க் அஹ்மத் அவர்கள் பல்வகை ஆற்றல்களும் திறமைகளும் வாய்ந்தவராகத் திகழ்ந்தார்.
ஷெய்க் அஹ்மத் அவர்கள் முதன் முறையாக பகீஹ் பில்லாஹ் அவர்களைச் சந்தித்த போது – ஷெய்க் அஹ்மத் அவர்களால் பெரிதும் கவரப்பட்ட பகீஹ் பில்லாஹ் பின்வருமாறு தமது நண்பர் ஒருவருக்கு எழுதினார்.
‘ஷெய்க் அஹ்மத் என்ற ஓர் இளைஞர் ஷிர்ஹிந்தியிலிருந்து சமீபத்தில் இங்கு வந்துள்ளார். அவர் அறிவும் பேராற்றலும் நிறைந்தவராகக் காணப்படுகிறார். அவர், ஒரு சில நாட்களாக என்னுடன் பழகி வருகிறார். நான் அவதானித்த வரை, அவர் எதிர்காலத்தில் மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்;து, முழு உலகையும் ஒளிமயமாக்குவார் எனத் தோன்றுகிறது.’
இத்தீர்க்க தரிசனம் முழுமையாக உண்மையாயிருந்தது. அக்காலத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சத்தியத்தை விரும்பும் ஆலிம்களும் சொற்ப அளவு சூஃபிகளும் வாழ்ந்து வந்தனர். எனினும், அக்காலத்தில் மலிந்திருந்த சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளியிட்டு, ஷரீஅத்தை மேலோங்கச் செய்ய, மன உறுதியோடு முன்வந்த ஒரே மனிதர், ஷெய்க் அஹ்மத் அவர்கள் ஆவார்.
அவர், அக்கால அரசாங்கக் கொள்கைகளைப் பலமாக எதிர்த்து, உண்மையான சமய நெறிக்குப் புத்துயிரளிக்கப் பெருமுயற்சி செய்தார். அப்போது, தீயபோக்குகள் அனைத்தையும் அவர் எதிர்த்துப்போராடியதோடு, ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
எனவே, அரசாங்கம் முழுச்சக்தியையும் திரட்டி, அவரை அடக்கியொடுக்க முயன்று, சிறையிலும் தள்ளியது. இறுதியில் தீமைகளை ஒழித்துக் கட்டுவதில் அவர் வெற்றி பெற்றார்.
மன்னர் அக்பரின் மரணத்தின் பின்னரும், ஷெய்க் அஹ்மதின் பணி தொடர்ந்து கொண்டே இருந்தது. மன்னர் ஜஹாங்கீருக்கு சாஷ்டாங்கம் செய்ய, ஷெய்க் அஹ்மத் மறுத்தார் என்பதற்காக அவரை குவாலியர் கோட்டையில் சிறையில் அடைத்தார். செய்க்கின் நன்னடத்தை காரணமாக மன்னர் அவரின் சீடரானார். பிற்காலத்தில் ஷாஜஹான் என்ற பெயரில் மன்னர் ஜஹாங்கீர் ஆன்மிகப் பயிற்சிக்காக தனது மகனை ஷெய்க் அஹ்மத் அவர்களிடம் ஒப்படைத்தார். இவையெல்லாம் இஸ்லாமியப் பிரசாரப் பணிக்குப் பெருந்துணையாக அமைந்தன. இஸ்லாத்தை மரியாதைக் குறைவாகவும் கேவலமாகவும் நடாத்திய அரசாங்கத்தின், மன்னர்களின் மனப்பான்மை, இப்பொழுது இஸ்லாத்தை மதித்து நடக்கும் வகையில் மாற்றமடைந்தது.
அரசவைச் சட்டகர்த்தாக்கள் புனைந்த புதுக்கோட்பாடு கள், சட்டவிதிகள் அனைத்தோடும் கூடிய அக்பரின் ‘தீனே இலாஹி’ என்ற புதிய மதம் செயல்படாமல் தடுக்கப்பட்டது. இஸ்லாமிய கட்டளைகளுக்கு எதிரான எல்லாத் திருத்தங்களும், விலக்குகளும் தாமாகவே இரத்தாகி, செல்லுபடியாகாதவையாகி விட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆட்சிமுறை முடியாட்சியாகவே தொடர்ந்தாலும், சமயக் கலைகள் மற்றும் ஷரீஅத் சட்டங்களைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் மனப்பான்மை சகிப்புத் தன்மையும் மரியாதையும் உள்ளதாக மாறிற்று.
ஷெய்க் அஹ்மத் அவர்கள் மரணித்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அவ்ரங்கஷீப் ஆலம்கீர் பிறந்தார். பெரும்பாலும் ஷெய்க் அஹ்மத் அவர்களின் நற்செல்வாக்குக் காரணமாக தைமூர் குடும்பத்தின் இவ்வரசர் சிறந்த அறிவு, ஒழுக்கப் பயிற்சிகளைப் பெறுவது சாத்தியமாயிற்று. இஸ்லாமிய ஷரீஅத்தை ஒழித்துக் கட்டும் செயலில் ஈடுபட்டவர், அக்பராயினும் அவரது கொள்ளுப் பேரனான அவ்ரங்கஷீப் இஸ்லாத்தின் பாதுகாவலராக ஆனார்.
ஷெய்க் அஹ்மத் ஷிர்ஹிந்தி அவர்கள் இந்தியாவின் முஸ்லிம் அரசாங்கம் முற்றாக ஜாஹிலியத்தின் கைகளுக்கு மாறுவதைத் தடுத்தார். அத்தோடு, மற்றிரு சாதனைகளை நிலைநாட்டிய பெருமையும் அவரைச் சாரும்.
01.    அக்காலத்தில் தஸவ்வுபுடன் இரண்டறக் கலந்திருந்த தத்துவச் சிந்தனை தொடர்பான மாசுமறுக்களையும், துறவி மடப் பயிற்சிகளையும் களைந்து, இஸ்லாத்தின் உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் காட்டினார்.
02.    பொதுமக்களிடையே நிலவிய சன்மார்க்கத்துக்கு முரணான எல்லாப் பழக்க வழக்கங்களையும், கடும் தீவிரமாக எரித்துக் கருத்துத் தெரிவித்தார்.அத்துடன், ஆன்மீக வழிகாட்டி ஒருவரின் கீழ் ஷரீஅத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சக்திவாய்ந்த ஓர் இயக்கத்தினைத் தோற்றுவித்தார்.
ஷெய்க் அஹ்மத் அவர்கள் நன்கு பயிற்சி வழங்கிய பல இஸ்லாமிய ஊழியர்களை உருவாக்கினார். இவர் இந்தியாவில் மட்டுமன்றி மத்தியாசியாவரை மக்களின் நம்பிக்கைகளையும் ஒழுக்கத்தையும் சீர்திருத்துவதில் பெரும் பங்காற்றினார். மன்னர் அக்பரின் தீனே இலாஹியை தர்க்க ரீதியாக விமர்சனம் செய்து, தூய இஸ்லாமிய ஷரீஆவுக்கு அது எவ்வாறெல்லாம் மாறுபடுகிறது, முரண்படுகிறது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தி, அப்புதிய மதத்தை வழக்கொழியச் செய்தமையில் ஷெய்க் அஹ்மத் ஷிர்ஹிந்தியின் பங்களிப்பு மகத்தானதும் மனங்கொள்ளத்தக்கதுமாகும்.

செய்திகள்