27.8.11

தரீகா வாதிகளினால் தரங்கெட்டுப் போகும் இலங்கை வானொலி முஸ்லீம் சேவை


Rasmin M.I.Sc
அன்பின் சகோதரர்களே! இலங்கை வானொலி முஸ்லீம் சேவை பற்றியும், அதன் தற்போதைய நிலை பற்றியும் இலங்கை வானொலி முஸ்லீம் சேவையும்ஏகத்துவ எதிர்ப்புப் பிரச்சாரமும்என்ற தலைப்பில் ஒரு ஆக்கத்தை ஏற்கனவே நமது தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

அதனுடைய தொடராக இந்த ஆக்கமும் வெளியிடப்படுகிறது.

இலங்கை அரசின் மூலம் அனைத்து மக்களுக்கும் பயன்படும் விதத்தில் முஸ்லீம்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அரச ஊடகம் தான் இலங்கை வானொலி முஸ்லீம் சேவை.

கடந்த பல வருடங்களாக இஸ்லாமிய நிகழ்ச்சிகளை வெளியிடுவதாக சொல்லிக் கொள்ளும் இந்த ஊடகத்தில் ஏகத்துவக் கருத்துக்களை பரப்புவதற்க இடமளிக்கப்படுவது மிகமிகக் குறைவான ஒன்றாகும்.

குர்ஆன், சுன்னா அடிப்படையிலான இஸ்லாத்தின் உண்மைத் தகவல்களை பரப்புவதற்கு இங்கு முழுமையான ஒத்துழைப்போ அல்லது அனுமதியோ தரப்படுவது கிடையாது. இதற்கு சில காரணங்களும் காணக்கிடைக்கிறது. இந்த ஊடகத்தின் முக்கிய பொருப்புக்களில் அமர்த்தப்பட்டிருப்பவர்கள் இஸ்லாத்தின் தூய்மையைக் கெடுத்து குட்டிச் சுவராக்கி வரலாற்றில் சில கருப்புப் பக்கங்களை உருவாக்கிய தரீக்கா ஆதரவாளர்கள் தாம்.

இலங்கையில் எப்பகுதியில் தரீக்காவாதிகளின் நிகழ்ச்சிகள் நடந்தாலும் அது நேரடி அஞ்சல் செய்யப்படுகிறது. இதே நேரத்தில் ஏகத்துவக் கருத்துக்களை பேசுவதற்கு பணம் செலவு செய்து, நிகழ்ச்சிகளை நடத்த நினைத்தால் கூட நம்மால் நடத்த முடிவதில்லை. அதற்கு அனுமதி கிடைப்பதில்லை.


இஸ்லாத்தின் உண்மைக் கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரப்பப்படக் கூடாது என்பதிலும் அப்படிப் பரப்பப்பட்டால் அது தங்கள் வருமானத்தைக் கெடுத்துவிடும் என்பதிலும் தரீக்காவாதிகள் மிகவும் குறியாக இருக்கிறார்கள்.

ஏகத்துவம் பேசுவதாகக் கூறும் சில இயக்கங்கள் இச்சேவையில் சில நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களுக்குத் அதன் தரமும் நிலையும் நன்றாகத் தெரியும்.

பொதுவான தலைப்புக்களையும், வேற்றுமையில் ஒன்றுமை போன்ற ஒரு தோற்றத்தையும் தான் அவர்களால் தருவதற்கு முடிகிறதோ தவிர உண்மையான சத்தியக் கொள்கைளை மக்கள் மத்தியில் சொல்வதற்கோ அல்லது அசத்தியத்தை உடைத்து நொறுக்குவதற்கோ முடிவதில்லை.

காரணம் அப்படிச் செய்தால் அவர்களுக்கு அந்த இடம் கிடைக்காமல் போய்விடும். இடத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால் பொதுவான தலைப்புக்களோடு நின்று கொள்ளவேண்டும்.

பித்அத்களை எதிர்த்துப் பேச முடியாது.

இணைவைத்தலை கண்டித்து கருத்துச் சொல்ல முடியாது.

மார்க்க விரோத செயல்களை அடித்து பேச முடியாது.

சத்தியத்தை உடைத்துச் சொல்ல முடியாது.

இப்படி பல எதிர்ப்புக்களையும் தாண்டிப் போனாலும் கடைசியில் பொதுவான தலைப்புக்கள் மாத்திரம் தான் மிஞ்சும். அதைத் தான் அவர்களும் செய்கிறார்களே!

சரி பொதுவான தலைப்புக்களில் கூட இருப்பதை இருப்பதைப் போன்று சொல்ல முடியுமா? வலைந்து கொடுத்துத் தான் போகவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினையாகிவிடும்.


இஸ்லாத்தின் தூய்மையைக் கெடுக்கும் விதமாக ஏகத்துவத்தை குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கும் தரிக்கா சிந்தனைவாதிகள், ஊடகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மார்க்கத்திற்கு விரோதமாக செயல்படுவதைக் தட்டிக் கேட்பதற்கோ அல்லது அதில் சம உரிமையைப் பெற்றுத் தருவதற்கோ யாரும் முயலாமல் இருப்பது பெரும் கவலைக்குறிய செய்தியாகும்.

சூபித்துவத்தை நிலை நாட்ட அசத்தியத்தை ஓங்கச் செய்யத் துடிக்கும் இந்த அசத்தியக் கூட்டத்தினரை அனைவரும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.


புனித ரமழான் மாதம் தொடங்கியதில் இருந்து இலங்கை வானொலி முஸ்லீம் சேவையின் செயல்பாட்டுகளை தொடர்ந்து கண்காணித்து வருபவர்கள் அதன் உண்மைத் தன்மையை யதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியும்.

முஸ்லீம் சேவையில் இப்தார் விஷேஷ நிகழ்ச்சி என்ற ஒன்றை நடத்துகிறார்கள். இந்நிகழ்ச்சியில் நேரடி அஞ்சல் செய்யப்படும் நிகழ்ச்சிகள் எங்கிருந்து வெளியாகின்றன, உரையாற்றுபவர்கள் யார் என்பதையெல்லாம் கவணித்துப் பாருங்கள். தொன்னூற்று ஒன்பது வீதம் தரீக்கா வணக்கத் தளங்களில் இருந்துதான் அவை அஞ்சல் செய்யப்படுகின்றன.

மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களை செய்து வழிகெட்டுப் போய்க் கொண்டிருப்பவர்களை அவ்வழியிலேயே விட்டு நாசப்படுத்தி மறுமையில் நஷ்டவாளிகளாக எழுப்பப்பட வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கமாக இருக்கிறது.

பொய்யையும், கட்டுக் கதைகளையும், கப்சாக்களையும் மாத்திரம் மூலதனமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் தரீக்கா வாதிகள் தாம் ஊடகத் துறை மூலமாக வளர்ந்து வருவதாக மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் தசாப்தம் முடிவுக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. சத்தியம் ஜெயிக்கும், உண்மைதான் நிலைக்கும், என்றும் வெற்றி ஏகத்துவத்திற்கு மாத்திரமே!

இலங்கை வானொலி முஸ்லீம் சேவை முழுமையாக ஏகத்துவத்தின் கீழ் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. விரட்டியடிக்கப்பட்ட மக்கா நகரில் உண்மை இஸ்லாம் நுழைந்து புரட்சி உண்டாக்கியதைப் போல் இன்ஷா அல்லாஹ் இங்கும் நுழையும் காலம் நெருங்கிவிட்டதை நாம் உணருவோமாக!

சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது.நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும் (அல்குர்ஆன்)

செய்திகள்